Published : 10 Nov 2024 01:34 PM
Last Updated : 10 Nov 2024 01:34 PM

மக்களவை தேர்தலில் பெற்ற ஆதரவை பேரவை தேர்தலிலும் பெற கட்சியினர் பாடுபடவேண்டும்: அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர்: மக்களவைத் தேர்தலில் மக்கள் அளித்த ஆதரவை சட்டப்பேரவைத் தேர்தலிலும் பெற திமுகவினர் பாடுபடவேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.

கரூர் மாவட்டம் தாந்தோணிமலையில் நடைபெற்ற திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, "2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றிப்பெற இலக்கு நிர்ணயித்து அதற்கான பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி உள்ளார்.

தமிழக அரசு கரூர் மாவட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் ரூ.3,000 கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் கரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கரூர் மாவட்டத்திற்காக என்ன திட்டங்களை கேட்டாலும் அவற்றை முதல்வரும், துணை முதல்வரும் வழங்கி வருகின்றனர்.

திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் விரிவாக எடுத்துச் சொல்லி மக்களவைத் தேர்தலில் 40க்கு 40 இடங்களில் வெற்றி பெற்றதைப் போல 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றிப் பெற கட்சியினர் பாடுபட வேண்டும். கடந்த தேர்தலைப் போல 2026 தேர்தலிலும் கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் ஸ்டாலின் அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றிப்பெற வைக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களை பிற மாநிலங்களும் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கின்றன. தமிழகத்தில் கல்வித்துறைக்கு ரூ. 44,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்விக்கு ரூ. 8,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கரூர் ஏற்றுமதியை 2030ம் ஆண்டில் ரூ.50,000 கோடியாக அதிகரிக்கும் நோக்கில் அதற்கான முன்னெடுப்புகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழக மக்களின் நலன்களுக்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் 20 மணி நேரம் உழைக்கிறார். சுற்றி சுழன்று பணியாற்றுகிறார். சாமானிய மக்கள் மனுவோடு நின்றாலே அவர்களை சந்தித்து மனுக்களை பெற்றுக்கொள்கிறார். முதல்வரை சந்திக்கும் மக்கள், அடுத்து உங்கள் ஆட்சிதான்; அடுத்த முதல்வரும் நீங்கள்தான் என கூறி வருகின்றனர்.

எனவே, சிறப்பு கவனம் செலுத்தி ஒன்றிணைத்து பாடுபட்டு மக்களவைத் தேர்தலில் மக்கள் அளித்த ஆதரவை சட்டப்பேரவைத் தேர்தலிலும் பெறுவதற்கு கட்சியினர் பாடுபடவேண்டும்" என தெரிவித்தார்.

கரூர் மாநகர செயலாளரும், மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவருமான எஸ்.பி.கனகராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x