Published : 10 Nov 2024 12:35 PM
Last Updated : 10 Nov 2024 12:35 PM

“பட்டாசு விபத்தில் உயிரிழப்போர் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும்” - விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

முதல்வர் ஸ்டாலின்

விருதுநகர்: பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி வரையிலான அனைத்து கல்விச் செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் பட்டம்புதூர் பகுதியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், ரூ.101 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விருதுநகரில் 95%க்கும் மேல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதிகளவில் உயர்கல்வி சேர்க்கை நடைபெறுவது முக்கிய சாதனை. பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி வரையிலான அனைத்து கல்விச் செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும். விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் கீழ் இதற்கு தனி நிதியம் உருவாக்கப்படும். கல்விச் செலவை அரசே ஏற்று நடத்த முதற்கட்டமாக இத்திட்டத்துக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும். வீடற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டு மனைகள் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

காரியாபட்டி மற்றும் திருச்சுழி வட்டங்களில் இருக்கும் கண்மாய்கள் மற்றும் அணைக்கட்டுகள் ரூ. 17 கோடி செலவில் மேம்படுத்தப்படும். காரியாப்பட்டி வட்டத்திலுள்ள தெற்காற்றின் குறுக்கே ரூ. 21 கோடி மதிப்பீட்டில் புதிய அணை ஒன்று கட்டப்படும். விருதுநகர் வட்டத்தின் கௌசிகா ஆறு, அருப்புக்கோட்டை வட்டத்தின் கஞ்சம்பட்டி கண்மாய் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகள் ரூ. 41 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.

வத்திராயிருப்பு மற்றும் இராஜபாளையம் பகுதிகளின் 22 கண்மாய்கள், ரூ. 18.10 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். காலிங்கபேரி, வெம்பக்கோட்டை, ஆனைக்குட்டம் மற்றும் கோல்வார்பட்டி அணைகள் ரூ. 23.30 கோடியில் மேம்படுத்தப்பட்டு, ரூ. 2.74 கோடியில் சுற்றுலாப் பயணிகளுக்காக பூங்காக்கள் அமைக்கப்படும்.

3 ஆண்டுகளில் 10 லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்டுள்ளன. பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று இந்தியாவின் சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியலில் என் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்கள். தமிழகத்தை உயர்த்த என் சக்தியை மீறி உழைப்பேன்.

நான் இன்னும் வேகமாக ஓட வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். பெருந்தலைவர் காமராஜரை நமக்கு வழங்கிய மண் விருதுநகர். பெருந்தலைவர் காமராஜரின் மறைவின் போது, அவரது மகன் மாதிரி அவருடைய இறுதி நிகழ்ச்சிகளை நடத்தியவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. எனது திருமணத்திற்கு காமராஜர் வந்ததை மறக்கவே முடியாது.

விருதுநகர் மாவட்டத்தின் எதிர்கால தொழிற்துறை வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும். அருப்புக்கோட்டை அருகே சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் ரூ.350 கோடியில் புதிய சிப்காட் தொழில் வளாகம் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

நகர்ப்புற வளர்ச்சித்துறை அறிவிப்புகள்:

  • சிவகாசி மாநகராட்சியில், 15 கோடி ரூபாய் செலவில், நவீன வசதிகளுடன் கூடிய மாநாட்டு அரங்கம் அமைக்கப்படும்.
  • விருதுநகர் நகராட்சியில், 24 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் சாலை மற்றும் மழைநீர் வடிகால் வசதிகள் மேம்படுத்தப்படும்.
  • சாத்தூர் நகராட்சியில், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பூங்கா மற்றும் சிறு பாலம் அமைக்கப்படும்.
  • இராஜபாளையம் நகராட்சியில், 13 கோடி ரூபாய் செலவில், மழைநீர் வடிகால் வசதிகள் அமைக்கப்படுவதுடன், கோடை நீர்த்தேக்கம் 5 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
  • அருப்புக்கோட்டை நகராட்சியில், 3 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் வசதிகள் அமைக்கப்படுவதுடன், ஒன்றரை கோடி ரூபாய் செலவில் பூங்காவும் அமைக்கப்படும்.
  • விருதுநகர் நகராட்சி எல்லைக்குள் வரக்கூடிய நெடுஞ்சாலைகள் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், அருப்புக்கோட்டை நகராட்சி எல்லைக்குள் இருக்கக்கூடிய நெடுஞ்சாலைகள் 10 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், காரியாபட்டி நகரத்தின் எல்லைக்குள் இருக்கக்கூடிய நெடுஞ்சாலைகள் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்படும்.
  • திருவில்லிபுத்தூரில், இருக்கின்ற ஆண்டாள் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் பயன்பாட்டிற்காக, கழிவறைகள் மற்றும் வாகன நிறுத்துமிடம் 2 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக வத்திராயிருப்புக்கு அருகே பிளவக்கல் அணைப் பகுதியில், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பூங்கா மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள சுற்றுலாத் தலமான சாஸ்தா கோவில் அருவி பகுதியில், 1 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால், தமிழ்நாடு முழுவதும் நான் தேர்தல் பரப்புரை செய்தேன். 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற கூட்டங்கள் வாயிலாக, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினேன். கழக ஆட்சி அமைந்ததும், அந்த மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து தீர்வு காணவேண்டும் என்று வாக்குறுதி அளித்தேன். ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றைய தினமே அதற்காக 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற தனி துறையை நான் உருவாக்கினேன்.

பெரும்பாலான மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்குரிய நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். அது உங்களுக்குத் தெரியும். அப்படி வந்த மனுக்களில் பெருபான்மையான மனுக்கள் எனக்கு வீடு இல்லை, வீடு கட்டுவதற்கு இடம் இல்லை, இடமோ, வீடோ அதை வாங்குவதற்கு பணம் இல்லை, இதுவரையில், புறம்போக்கு நிலத்தில் வாழ்ந்து வருகிறேன் என்று பல பேர் மனு அளித்திருந்தார்கள்.

மக்களின் குறைகளை தீர்ப்பது ஒரு அரசாங்கத்தின் கடமை என்ற அடிப்படையில், வருவாய்த் துறைக்கு நான் ஒரு உத்தரவிட்டேன். "வீடற்ற ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனைகளை எந்தளவுக்கு வழங்க முடியுமோ அந்தளவுக்கு வழங்குங்கள்" என்று நான் சொன்னேன். நத்தம் என்று வகைப்படுத்தப்பட்ட நிலங்கள் போதிய அளவு இல்லை. ஆனால் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களை நத்தமாக வகைப்பாடு மாற்றம் செய்து, வீடற்ற ஏழைகளுக்கு இலவசமாக வழங்க உத்தரவிட்டேன்.

தீவிரமான நடவடிக்கைகளை நாம் எடுத்த காரணத்தால், 2021-ல் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்ததில் இருந்து இன்று வரை, மொத்தமாக இந்த மூன்று ஆண்டுகளில், 10 இலட்சத்து 3 ஆயிரத்து 874 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள், இ-பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கிறது. நில உரிமையை வழங்குவதிலும், திராவிட மாடல் ஆட்சி தலைசிறந்த ஆட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திராவிட இயக்கம், சமூக சீர்திருத்த இயக்கம் மட்டுமல்ல, இதற்கு சமதர்மக் கொள்கைளும் உண்டு. அதைத்தான் “சுயமரியாதைச் சமதர்மம்” என்று தந்தை பெரியார் குறிப்பிட்டார்.

ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, மக்கள் நலனைப் பற்றி கிஞ்சித்தும் கவலப்படாதவர் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. “மக்கள் நலத்திட்டங்களுக்கு மூலதனச் செலவுகளை மேற்கொள்ளாமல், கலைஞர் பெயரில், மக்களுக்குப் பயன்படாத திட்டங்களுக்கு கோடிக்கணக்கான நிதியை நான் ஒதுக்கி வருவதாக” உளறியிருக்கிறார். அதை படித்ததுமே சிரிப்புதான் வந்தது. ஒருவர் பொய் சொல்லலாம்; ஆனால் ஏக்கர் கணக்கில் சொல்லக்கூடாது என்று வேடிக்கையாக சொல்லுவார்கள். அதை இனிமேல், கொஞ்சம் மாற்றி பொய் சொல்லலாம்; ஆனால், பழனிசாமி அளவுக்கு பொய் சொல்லக் கூடாது என்றுதான் இப்போது சொல்லவேண்டும். அந்த அளவுக்குப் புளுகுமூட்டையை அவிழ்த்து விடுகிறார்.

நம்முடைய ஆட்சியில், நவீனத் தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி தலைவர் கலைஞர் பெயரால், மக்கள் நலனுக்காக நாம் செய்து கொண்டு வருகின்ற மூலதனச் செலவுகள், என்னென்ன; எளிய மக்களுக்கான நலத்திட்டங்கள் என்னென்ன; என இதே மேடையில் என்னால் மணிக்கணக்கில் சொல்ல முடியும். நான் கேட்கிறேன்… எதை நீங்கள் மக்களுக்குப் பயன்படாத திட்டம் என்று சொல்கிறீர்கள்?

தமிழ்நாட்டின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்காக கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கம் அமைத்திருக்கிறோமே…. அதை பயன்படாத திட்டம் என்று சொல்கிறீர்களா? இல்லை, தென் தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் – இளைஞர்களுக்கும் – அறிவுச் சுரங்கமாக மதுரையில் இருக்கின்ற கலைஞர் நூற்றாண்டு நூலகம்… அதை பயன்படாத திட்டம் என்று சொல்கிறீர்களா?

இல்லை, ஆயிரக்கணக்கான மக்களுடைய உடல்நலனையும் - உயிரையும் காப்பாற்றுகின்ற கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை….. அதை பயனில்லை என்று சொல்கிறீர்களா? இல்லை, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒரு கோடியே 20 இலட்சம் தாய்மார்கள் மாதந்தோறும் 1000 ரூபாய் வாங்குகின்ற, ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ அதை பயன்படாத திட்டம் என்று சொல்கிறீர்களா? எதைச் சொல்கிறீர்கள்கள்? பழனிசாமி அவர்க்ளே... இப்படி வாய்த்துடுக்காவும், ஆணவமாவும் பேசி பேசித்தான் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

நான் உறுதியாக சொல்கிறேன். உங்கள் ஆணவத்துக்காகவே, தமிழ்நாட்டு மக்கள் உங்களை இனிமேல் தோற்கடித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அது உறுதி! நான் கேட்கிறேன்… தமிழ்மொழி, தமிழ் இனம் தமிழ்நாட்டை காக்க 80 ஆண்டு காலம் ஓயாமல் உழைத்த, தலைவர் கலைஞர் பெயரை மக்கள்நலத் திட்டங்களுக்கு வைக்காமல், யார் பெயரை வைப்பது? பதவி சுகத்துக்காக, கரப்பான்பூச்சி மாதிரி தரையில் ஊர்ந்து சென்றீர்களே, உங்கள் பெயரையா வைக்க முடியும்? என்ன பேசுகிறீர்கள்? ‘கலைஞர்’ என்பது தமிழர்களின் மனதில் பொறிக்கப்பட்ட பெயர். தமிழ்நாட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத அடையாளம்.

கலைஞர் தான் - எந்நாளும் தமிழ்நாட்டைக் காக்கும் காவல் அரண். அவருடைய கொள்கைகள், சிந்தனைகளைதான் நான் செயல்படுத்திக் கொண்டு வருகிறேன். விடியல் பயணம், புதுமைப்பெண், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் – நான் முதல்வன் – தமிழ்ப்புதல்வன் என்று இந்த திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் எல்லாமே கலைஞர் பெயரைத்தான் சொல்லுகிறது.

கலைஞரின் பிள்ளையாக மட்டுமல்ல, கலைஞருடைய தொண்டனாகவும் இதை நான் பெருமையாக சொல்கிறேன். எங்கள் தலைவர் பெயரால், தமிழ்நாட்டு மக்களை வாழவைக்கும் திட்டங்களை நிறைவேற்றியதில் நான் பெருமிதப்படுகிறேன்.

கலைஞரின் புகழ் வெளிச்சம், இந்தியா முழுக்க பரவி இருக்கிறது! அந்த வெளிச்சம் பழனிசாமியின் கண்களை கூச வைக்கிறது. அவ்வளவுதான். திராவிட மாடல் ஆட்சியின் புகழ் வெளிச்சத்தில் புதுவெளிச்சம் தேடும் புற்றீசல்கள் காணாமல் போகும். என்னை பொறுத்தவரையில், என்றும் – எப்போதும் – உங்களுக்கு உறுதுணையாக உங்கள் வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் ஒரு சேவகனாக என்னுடைய பணிகள் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x