Published : 10 Nov 2024 09:20 AM
Last Updated : 10 Nov 2024 09:20 AM

வேளச்சேரியில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை: அமைச்சர் உறுதி

சென்னை: வேளச்சேரி பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை வேளச்சேரி எம்ஆர்டிஎஸ் அருகில் உள்ள ரயில்வே சாலை வடக்கு பகுதியில் வெள்ள பாதிப்பைத் தடுக்கும் வகையில் வெட்டப்பட்டுள்ள குளத்தை சுகாதாரத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, ஆணையர் ஜெ.குமரகுருபரன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், திருவிக நகர் சட்டப்பேரவை உறுப்பினர் தாயகம் கவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்தில் 2022 மற்றும் 2023ம் நிதியாண்டில் 50 கி.மீ. நீளத்துக்கு புதிதாக மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தற்போது அடையாறு மண்டலத்தில் 175 கி.மீ. நீளமுள்ள மழைநீர் வடிகால்களில் இரண்டாம் கட்டமாக 166 கி.மீ. வரை வண்டல்கள் தூர்வாரப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ரூ.27 லட்சத்தில் தூர்வாரும் பணி: வேளச்சேரி பகுதியிலிருந்து மழைநீர் வெளியேறும் பகுதியான 6 சிறுதுளை கால்வாய் பகுதியில் ரூ.27.60 லட்சத்தில் முழுமையாக தூர்வாரப்பட்டுள்ளது. அடையாறு மண்டலமானது, அடையாறு உபநீர் வடிநிலம் மற்றும் கோவளம் உபரி நீர் வடிநிலம் சேர்ந்த பகுதியாகும். வேளச்சேரிக்கு உட்பட்ட வார்டுகள் 172, 175, 176, 177, 178 ஆகிய பகுதிகளில் உள்ள மழைநீர் முழுமையாக வீராங்கல் ஓடை மூலமாகவும், ரயில்வே பாலத்துக்கு குறுக்கே உள்ள 6 சிறுதுளை கால்வாய் மூலமாகவும் சதுப்பு நிலத்தை அடைகிறது. வீராங்கல் ஓடை முழுவதுமாக தூர்வாரப்பட்டு மழைநீர் தேங்காமல் வடிவதற்கு ஏதுவாக உள்ளது. வேளச்சேரியில் பெரும்மழையின்போது வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கிண்டி மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் ஏற்கெனவே இருக்கும் குளங்கள் பெரிதாக்கப்பட்டும், 4.50 மில்லியன் கனஅடி மழைநீரை சேகரிக்கும் விதமாக புதிதாக 4 குளங்கள் வெட்டும் பணிகளில், 2 குளங்களுக்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள2 குளங்களுக்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. 6 சிறுதுளை கால்வாய் தூர்வாரப்படுவது மட்டுமல்லாமல். அதன் முன்புள்ள அரசு நிலங்களில் குளங்கள் அமைக்கப்பட்டு வேளச்சேரி பகுதியில் மழைநீர் தேங்காவண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குளம் வெட்டும் பணி முடிவு: எம்ஆர்டிஎஸ் சாலை வடக்கு பகுதியில் அமைந்துள்ள அரசு நிலங்களில் புதிதாக குளம் வெட்டி நீர் தேக்கம் மற்றும் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு, தற்போது 13,800 ச.மீட்டர் பரப்பளவில் குளம் வெட்டும் பணி முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டான்சி நகர், பேபி நகர், புவனேஸ்வரி நகர், விஜிபி செல்வா நகர், வீனஸ் காலனி, அன்னை இந்திரா நகர் மற்றும் அண்ணா நகர் பகுதிவாழ் மக்களின் வெள்ள பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x