Published : 10 Nov 2024 04:42 AM
Last Updated : 10 Nov 2024 04:42 AM
சென்னை: மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 2024-25-ம் நிதியாண்டுக்கான சமுதாய முதலீட்டு நிதி மற்றும் சுழல் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நகர்ப்புர வாழ்வாதார இயக்கம், தீன்தயாள் உபாத்தியாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகியவை செயல்பாட்டில் இருந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மகளிர் சுயஉதவிக் குழுக்களின் தொழில் வாய்ப்புகளுக்காக சுழல் நிதி, வங்கிக் கடன் இணைப்புகளை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வழங்கி வருகிறது.
அதன்படி, மகளிர் சுயஉதவிக் குழுக்களின் நிதி ஆதாரத்தை மேம்படுத்தி, அவர்களது பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் தகுதியுள்ள குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கப்படுகிறது. அதேபோல் 6 மாதங்கள் நிறைவடைந்த சுயஉதவிக் குழுக்களுக்கு அதிகபட்சமாக தலா ரூ.1.50 லட்சம் வரை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலம் குறைந்த வட்டியில் கடனாக சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படுகிறது.
அந்தவகையில் 2024-25-ம் நிதியாண்டுக்கு தமிழகத்தில் 14 மாவட்டங்களில் செயல்படும் 1,209 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1.81 கோடி சுழல் நிதியும், 17 மாவட்டங்களில் செயல்படும் 1,731 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.25.83 கோடிக்கு சமுதாய முதலீட்டு நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுழல் நிதி மற்றும் சமுதாய முதலீட்டு நிதியை பெறும் சுயஉதவிக் குழுக்கள் அனைத்தும் அந்த நிதிகளை முறையாக பயன்படுத்தி, சிறப்பாக செயல்படுமாறு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT