Published : 10 Nov 2024 04:30 AM
Last Updated : 10 Nov 2024 04:30 AM

விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர் குழந்தைகளின் கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும்: முதல்வரிடம் பட்டாசு தொழிலாளர்கள் கோரிக்கை

விருதுநகர் அருகே கன்னிசேரிபுதூரில் உள்ள பட்டாசு ஆலையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டு, தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். உடன் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன்.

விருதுநகர்: விருதுநகர் அடுத்த கன்னிசேரிபுதூர் மேலசின்னையாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலைக்கு சென்ற முதல்வர், அங்கு ரசாயன பொருட்கள் வைக்கும் அறை, உற்பத்தி அறை ஆகியவற்றை ஆய்வுசெய்து, தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். பட்டாசு தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் புதிய ஆட்சியர் அலுவலக கட்டிட திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக, முதல்வர் ஸ்டாலின் நேற்று விருதுநகர் வந்தார்.

பிற்பகல் 1 மணி அளவில் விருதுநகர் அடுத்த கன்னிசேரிபுதூர் மேலசின்னையாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலைக்கு சென்ற முதல்வர், அங்கு ரசாயன பொருட்கள் வைக்கும் அறை, உற்பத்தி அறை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வுசெய்து, தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது, 36 பெண்கள் உட்பட 80 பேர் பணியாற்றும் அந்த பட்டாசு ஆலையில் இதுவரை எந்த விபத்தும் நடந்ததில்லை என்பதை கேட்டறிந்த முதல்வர், பட்டாசு ஆலையின் உரிமையாளர் மற்றும் தொழிலாளர்களை பாராட்டினார்.

அனைத்து பட்டாசு ஆலைகளிலும் பசுமையான சூழலை பராமரித்து, பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த வேண்டும் என்றும், அனைத்து தொழிலாளர்களையும் காப்பீட்டு திட்டத்தில் இணைக்குமாறும் முதல்வர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், சீனிவாசன் எம்எல்ஏ ஆகியோர் உடன் இருந்தனர்.

முதல்வரிடம் பேசியது குறித்து, பின்னர் செய்தியாளர்களிடம் பட்டாசு தொழிலாளி இசக்கியம்மாள் கூறியதாவது: பட்டாசு ஆலையின் பாதுகாப்புகுறித்து கேட்டறிந்த முதல்வர், மகளிர் உரிமைத் தொகை முறையாக வருகிறதா என்றும் கேட்டார். இருமுறை விண்ணப்பித்தும் மகளிர் உரிமைத் தொகை வரவில்லை என்று தெரிவித்தோம்.

மேலும், விபத்தில் பட்டாசு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டால், அவர்களது குழந்தைகளின் படிப்புச் செலவை அரசு ஏற்க வேண்டும் என்றும் முதல்வரிடம் தெரிவித்தேன்.

அதற்கு முதல்வர், ‘‘பட்டாசு தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்’’ என்று உறுதி அளித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

பட்டாசு ஆலை உரிமையாளர் நாகராஜன் கூறும்போது, “பட்டாசு ஆலைக்குமுதல்வர் ஸ்டாலின் வந்து ஆய்வுசெய்து, தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். முதல்வரே நேரில் வந்ததால், உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். முதல்வரின் வருகையால் பட்டாசு தொழிலில்நல்ல மாற்றம் ஏற்படும் என நம்புகிறோம்” என்றார்.

விருதுநகரில் முதல்வருக்கு பிரம்மாண்ட வரவேற்பு: அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக விருதுநகர் வந்தார். விருதுநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மதுரை - விருதுநகர் மாவட்ட எல்லையான சத்திரரெட்டியபட்டியில் முதல்வருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சாலையின் இருபுறமும் 3 கி.மீ. தொலைவுக்கு அணிவகுத்து நின்று முதல்வரை உற்சாகத்துடன் வரவேற்றனர். தொண்டர்களை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்த முதல்வரும் வாகனத்தில் இருந்து இறங்கி, சிறிது தூரம் நடந்து சென்று மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

பின்னர், மாலை 6 மணிக்கு விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து எம்ஜிஆர் சிலை, ராமமூர்த்தி சாலை வழியாக அரசு மருத்துவமனை அருகில் உள்ள தனியார் மண்டபம் வரை சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு ‘ரோடு ஷோ’ வாக, முதல்வர் தனது சுற்றுப்பயண வாகனத்தில் அமர்ந்தபடி வந்தார். சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் கையசைத்து முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர், தனியார் மண்டபத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பங்கேற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x