Published : 10 Nov 2024 07:45 AM
Last Updated : 10 Nov 2024 07:45 AM
சென்னை: தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை கூடுதல் ஆணையர் தேவபார்த்தசாரதி கூறியதாவது: இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகம், உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறுவதில் சில முக்கிய திருத்தங்களை அமல்படுத்தி உள்ளது.
அதன்படி, மொத்தவியாபாரிகள், விநியோகஸ்தர்கள், சில்லறை வியாபாரிகள், போக்குவரத்தாளர்கள், இருப்பு கிடங்குகள், இறக்குமதியாளர்கள், உணவு பொருட்களை மட்டும் விற்பனை செய்யும் இதர வியாபாரிகள், பெட்டிக் கடைகள் உள்ளிட்டோர் உடனடியாக உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற, தட்கல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பித்தவுடன், ஓராண்டுக்கான அனுமதி வழங்கப்படும். பின், சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் ஆய்வு நடத்தி, நிரந்தர சான்றுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதொடர்பாக கூடுதல் விபரங்களை, https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
மேலும், தெருவில் நடந்து அல்லது தள்ளுவண்டிகளில் உணவு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு பதிவு சான்றிதழ் கட்டணமாக 100 ரூபாய்பெறப்பட்டு வருகிறது. தற்போது,அவர்களுக்கு பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், முழுமையான இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அவ்வாறு விலக்கு அளிக்கப்பட்டால், கட்டணமின்றி பதிவு சான்று வழங்கப்படும்.
உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் இல்லாமலோ, காலாவதியான உரிமத்துடனோ உணவு வணிகம் செய்வது தண்டனைக்குரியது. அவ்வாறு வணிகம் செய்வோருக்கு, ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT