Published : 10 Nov 2024 08:58 AM
Last Updated : 10 Nov 2024 08:58 AM

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தரப்படாததால் திமுக கூட்டணிக்கு உள்ளேயே பிரச்சினை: தமிழிசை விமர்சனம்

சென்னை: வெளியில் இருந்து யாரும் திமுக கூட்டணிக்குள் பிரச்சினைகளை உருவாக்கவில்லை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு, உரிய அங்கீகாரம் தரப்படாததால், கூட்டணிக்குள் அவர்களே பிரச்சினைகளை உருவாக்கி கொள்கின்றனர் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் நேற்று நடைபெற்ற தனியார் அறக்கட்டளை ஆண்டு விழாவில் தமிழகபாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாடு முழுவதும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு ரூ.5லட்சம் மருத்துவ காப்பீடு திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம்செய்துள்ளார். ஆனால், தமிழகத்தில் இந்த திட்டம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகி உள்ளது. மத்திய அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும், அதை ஏற்கமாட்டோம் என தமிழக அதிகாரிகள் சொல்வது சரியல்ல. அனைத்து மாநிலங்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும். இத்திட்டத்தை தென் சென்னை முழுவதும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறோம். விரைவில் தமிழகம் முழுவதும் எடுத்துச் செல்வோம். 70 வயதை கடந்த அனைவரும் எந்தவித வருமான உச்ச வரம்பும் இல்லாமல், இத்திட்டம் மூலம் உயர் ரக சிகிச்சை பெற முடியும்.

கூட்டணியில் முறிவு: தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணியோ, தேசிய அளவில் இண்டியா கூட்டணியோ உறுதியாக இல்லை. திமுக கூட்டணி உறுதியாக இருப்பதாக அவர்கள் கூறினாலும், அது முறிந்துதான் போயிருக்கிறது. கூட்டணியில் பிரச்சினைகளை உருவாக்க சிலர் முயற்சிக்கின்றனர் என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். வெளியில் இருந்து யாரும் திமுக கூட்டணிக்குள் பிரச்சினைகளை உருவாக்கவில்லை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு, உரிய அங்கீகாரம் தரப்படவில்லை. இதனால், கூட்டணிக்குள் அவர்களே பிரச்சினைகளை உருவாக்கி கொள்கின்றனர்.

மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். எனவே, பாஜக கூட்டணியை பலம் பொருந்தியதாக மாற்றி, 2026-ல் திமுக அல்லாத கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று உறுதியாக நம்புகிறோம். திமுக கூட்டணியில் இருந்து பலர் வெளியே வர வாய்ப்பு உள்ளது.

திமுக கூட்டணி 2026-ல் ஆட்சிக்கு வரப்போவது இல்லை. அதனால், தேர்தலுக்கு பிறகு திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கிடைக்க வாய்ப்பு இல்லை. அதனால், இப்போதே மீதமுள்ள நாட்களிலாவது ஆட்சியில் பங்கு எடுத்துக் கொள்ளுங்கள் என திருமாவளவன் போன்றோருக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x