Published : 10 Nov 2024 09:06 AM
Last Updated : 10 Nov 2024 09:06 AM
சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் 2,153 போலீஸாரை பணியிடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை டிஜிபி அலுவலகத்தில் வாரந்தோறும் காவலர் குறைத்தீர்க்கும் முகாம் நடந்து வருகிறது. இந்த முகாமில், கலந்து கொள்ளும் காவலர்கள் டிஜிபி சங்கர் ஜிவாலிடம் மாவட்டம் விட்டு மாவட்டமும், மாநகரம் விட்டு மாநகரமும் பணியிட மாற்றம் கோரி மனு அளித்தனர். இதேபோல், டிஜிபி சங்கர் ஜிவால் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆய்வு செல்லும் போதும் காவலர்கள் பலர் மனு அளித்தனர். இந்நிலையில், டிஜிபியிடம் காவலர்கள் அளித்துள்ள மனுக்களில், தகுதியுடைவர்களை கண்டறிந்து, தமிழகம் முழுவதும் காவலர்கள், முதல் நிலைக் காவலர்கள், தலைமை காவலர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஆகிய நிலைகளில் பணிபுரியும் 2,153 பேரை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டார்.
இதில் காவல்துறையின் சிறப்பு பிரிவில் பணியாற்றுபவர்கள், நிர்வாக ரீதியாக ஏற்கெனவே கடந்த ஓராண்டுக்குள் பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள், புகாரில் சிக்கி பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள், விளையாட்டு போட்டிகளுக்காக பணிபுரிபவர்கள் ஆகியோர் இந்த பணியிட மாற்ற பட்டியலில் இருந்தால் அவர்களை ஏற்கெனவே பணிபுரியும் இடத்தில் இருந்து விடுவிக்க வேண்டாம் என்றும், அவர்கள் குறித்த தகவல்களை அந்தந்த மாவட்ட மற்றும்மாநகர காவல்துறை அலுவலகங்கள், காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், மீதமுள்ள அனைவரும் உடனடியாக ஏற்கெனவே பணிபுரியும் இடத்தில் இருந்து விடுவித்துக் கொண்டு, புதிய பணியிடத்தில் சேர்ந்து கொள்ளலாம் என்றும் சங்கர் ஜிவால் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவலர்கள், ஓரிரு நாட்களில் புதிய பொறுப்பை ஏற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT