Published : 10 Nov 2024 09:50 AM
Last Updated : 10 Nov 2024 09:50 AM
கிருஷ்ணகிரி / அரூர்: போச்சம்பள்ளி பகுதியில் நேற்று மதியம் 3.3 ரிக்டர் அலகு அளவுக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட குள்ளம்பட்டி ஊராட்சியில் உள்ள பெத்தபாம்பட்டி பகுதியில் நேற்று மதியம் 1.32 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள வீடுகள், கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. உடனடியாக அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, காலி நிலங்களுக்குச் சென்றனர். சிறிது நேரத்தில் அதிர்வு நின்றாலும், மக்களிடையே அச்சம் நிலவியது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு கூறும்போது "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3.3 ரிக்டர் அலகு அளவுக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டுளளது. 5 கி.மீ.ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதால் சேதம் ஏதுமில்லை.
பாதிப்பு எதுவுமில்லை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, சந்தூர், கிருஷ்ணகிரி, அரசம்பட்டி, ஊத்தங்கரை மற்றும் தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம், கம்பைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வந்தாலும், எந்த பாதிப்பும் இல்லை. பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை" என்றார்.
இதுகுறித்து கிராம மக்கள்சிலர் கூறியபோது, "சந்தூர், குதிரைசந்தம்பட்டி, வெப்பாலம்பட்டி மற்றும் சுற்று வட்டாரங்களில் நில அதிர்வு ஏற்பட்டதை நன்கு உணர முடிந்தது" என்றனர்.
அரூர் பகுதியில்... இதேபோல, அரூர் பகுதியில் நேற்று பிற்பகல் 1.32 மணியளவில் லேசான நில அதிர்வை மக்கள் உணர்ந்தனர். அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், கே.ஈச்சம்பாடி தீர்த்தமலை, கடத்தூர், வேப்பம்பட்டி, அனுமன் தீர்த்தம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்வால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT