Published : 09 Nov 2024 08:27 PM
Last Updated : 09 Nov 2024 08:27 PM
விருதுநகர்: விருதுநகர் வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் சனிக்கிழமை மாலை புதிய பேருந்து நிலையம் முதல் எம்ஜிஆர் சிலை வரை வாகனத்தில் ஊர்வலமாக சென்று ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்து திமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர்.
விருதுநகர் அருகே சூலக்கரை மேட்டில் உள்ள மாற்றுத்திறன் மற்றும் செவித்திறன் குறைவுடையோர் பள்ளி மற்றும் அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் மாணவர்களுடன் கலந்துரையாடி, காப்பகத்தில் உள்ள வசதிகள், தேவைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அவர் மாணவர்களுக்கு சாக்லேட் அளித்தார்.
அதன்பின் விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து எம்ஜிஆர் சிலை வழியாக ராமமூர்த்தி சாலையில் அரசு மருத்துவமனை அருகே உள்ள தனியார் மண்டபம் வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனப் பேரணியாக சென்று ரோடு ஷோ நடத்தினார். அங்கு சாலையின் இருபுறங்களிலும் இருந்து தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது ரோடு ஷோவில் கலந்து கொண்ட இளம் தம்பதியின் பெண் குழந்தைக்கு ‘செம்மொழி’ என முதல்வர் ஸ்டாலின் பெயர் சூட்டினார்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கீழ் நடத்தப்பட்ட வட்டார வளமைய ஆசிரியர் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த ஆசிரியர்களுக்கு உடனடியாக கலந்தாய்வு நடத்தி பணி நியமன ஆணை வழங்க கோரி, தேர்வு எழுதியவர்கள் முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதன்பின் தனியார் மண்டபத்தில் விருதுநகர் மாவட்ட திமுக நிர்வாகிகள் உடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏக்கள் ஆர்.ஆர்.சீனிவாசன், தங்கபாண்டியன் மற்றும் விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை தொகுதிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டனர்.
பட்டாசு ஆலையில் ஆய்வு: விருதுநகரில் ஞாயிற்றுக்கிழமை டைபெறும் புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்காக சனிக்கிழமை (நவ.9) விருதுநகர் வந்த முதல்வர் ஸ்டாலின், விருதுநகர் அருகே கன்னிசேரிபுதூர் மேலசின்னையாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலைக்கு நேரில் சென்று பட்டாசு ஆலையில் ஆய்வு செய்து தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
இது குறித்து முதல்வரிடம் பேசிய பட்டாசு தொழிலாளி இசக்கியம்மாள் கூறுகையில், “முதல்வர் பட்டாசு உற்பத்தி குறித்தும், விபத்து எதும் நடந்துள்ளதா, மாதம் ரூ.1,000 மகளிர் உரிமை தொகை முறையாக வருகிறதா?, உங்களுக்கு ஏதும் குறைகள் உள்ளதா எனக் கேட்டார். எங்களது ஆலையில் இதுவரை விபத்து ஏதும் நடக்கவில்லை. விபத்தில் பட்டாசு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டால், எங்களது குழந்தைகள் படிப்புச் செலவை அரசு ஏற்க வேண்டும்.
மேலும், எனக்கு இருமுறை விண்ணப்பித்தும் மகளிர் உரிமைத் தொகை வரவில்லை. சொந்த வீடு இல்லை. பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. வீடு வழங்க வேண்டும், என முதல்வரிடம் தெரிவித்தேன். அதற்கு முதல்வர், பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். விடுபட்டவர்களுக்கு மகளிர் உதவி தொகை வழங்கப்படும் என தெரிவித்தது மகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT