Last Updated : 09 Nov, 2024 05:55 PM

7  

Published : 09 Nov 2024 05:55 PM
Last Updated : 09 Nov 2024 05:55 PM

“விஜய் ‘ஆர்கானிக் மாஸ்’ என்றால், விசிக என்ன..?!” - திருமாவளவன் ஆவேசப் பேச்சு

திண்டிவனத்தில் நடத்த கட்சி நிர்வாகியின் இல்ல நிகழ்வில்  விசிக தலைவர் திருமாவளவன் உரையாற்றினார். 

விழுப்புரம்: “ஆசை காட்டினால் நாம் வெளியேறி விடுவோம் என நினைக்கிறார்கள். திருமாவளவன் சராசரி அரசியல்வாதி இல்லை என்பதை காலம் சொல்லும். அதனை புரிந்துகொள்வதற்கு உங்களுக்கு பத்து ஆண்டுகள் தேவைப்படும். யார் புதிய புதிய கட்சிகளை தொடங்கினாலும், எவ்வளவு பெரிய புகழ் பெற்றவர்களாக இருந்தாலும் அவர்கள் விடுதலை சிறுத்தைகளுக்கு போட்டியாக வர முடியாது. நம் களம் முற்றிலும் வேறானது. இந்தக் களத்தில் யாரும் நம்மோடு போட்டிக்கு வரமுடியாது,” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மேலும், “விஜய் ஆர்கானிக் மாஸ் என்கிறார்கள். அப்படியானால் விசிக என்ன இன்-ஆர்கானிக் மாஸா?” என்றார்.

திண்டிவனத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த விசிக நிர்வாகியின் இல்ல நிகழ்வில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்றார். அந்நிகழ்வில் அவர் பேசியது: “ஒரு ஊரில் ஒரு கொடியை ஏற்றுவது என்பதே நமக்கு யுத்தம், காவல் துறை அனுமதிக்காது. அந்தப் பகுதியில் இருக்கிற மற்ற அரசியல் அமைப்புகளின் எதிர்ப்பு. அவ்வளவு எளிதாக ஒரு கொடியை நம்மால் ஊன்றிவிட முடியாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கொடி ஊன்றுவதில் நமக்கு பெரும் போராட்டங்கள் இருந்திருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் எண்ணற்ற நிகழ்வுகள். இது அண்மைக் காலமாக மட்டுமல்ல தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இப்போதுதான் உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெறுவதற்கான சூழலைச் சந்தித்து வருகிறோம். கடுமையான நெருக்கடிகள் எல்லாம் கடந்து பயணித்து வருகிறோம்.

கொடி யுத்தம் என்கிற பெயரிலேயே ஒரு புத்தகமே தொகுக்கலாம். நான் அடிக்கடி சொல்லுவேன், எனக்குப் பின்னால், பத்தாண்டுகளுக்கு பின்னால் கட்சி தொடங்கி இருந்தாலும் கூட பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் அவர்களை முன்னே சொல்லி என்னைப் பின்னால் கூறுவார்கள். அவர் பெயரை முன்னே போட்டு என் பெயரை பின்னால் போடுவார்கள். இதுதான் இந்த மண்ணின் உளவியல் எனக்கூறி இருக்கிறேன். இப்போதும் அது நடக்கிறது. நம்மை ஓரங்கட்ட பார்த்தாலும் ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம் என்பதை தீர்மானிப்போம். நீங்கள் தீர்மானிப்பது மையம் அல்ல நாங்கள் தீர்மானிப்பது தான் மையம்.

ஏன் திரும்பத் திரும்பத் திருமாவளவன் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் என கூறுகிறார். நானாகவா சொல்கிறேன்? நீங்கள் திரும்பத் திரும்பக் கேள்வி கேட்பதால் தான் அந்த பதிலைக் கூறுகிறேன். திமுக விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணியில் அதிகாரத்தை பகிர்ந்து கொள்கிறோம். அவர்கள் மேஜர் பார்ட்னர் என்றால், நாங்கள் மைனர் பார்ட்னராக இருக்கிறோம். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. நான் தனியாகச் சென்று திமுகவிடம் டீல் பண்ணவில்லை, காங்கிரஸ் தனியாகச் சென்று கேட்கவில்லை.

நாங்கள் இடம்பெற்றிருக்கக் கூடிய கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற திமுகவை விமர்சிக்கும் போது அதற்கு நான் பதில் சொல்லவில்லை என்றால் நான் இந்தக் கூட்டணியில் எதற்கு நீடிக்கிறேன் என்பதே கேள்விக்குறியாக மாறும். திமுகவுக்காக சொல்லவில்லை, அந்த அணியில் இடம் பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகளுக்காக பதில் சொல்கிறோம். நாங்கள் வளரும் நிலையில் இருக்கிறோம். கொள்கை பிடிப்போடு இருக்கிறோம். அங்கே போனால் வளரலாமா, இங்கே போனால் வளரலாமா என்று ஒரே நேரத்தில் பேரம் பேசி அரசியல் செய்யவில்லை. அது எங்களுக்கு தேவை இல்லை.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு அரசியல் சக்தியாக பரிணமித்திருக்கிறது. அனைத்துத் தரப்பினரும் ஆதரிக்கக் கூடிய பேரியக்கமாக உள்ளது. கொள்கைப் பிடிப்போடு இருந்தால் தான் எத்தனை சதி முயற்சிகள் நடந்தாலும் அதனை முறியடிக்க முடியும் என்பதற்கு திமுக ஒரு சான்று. இது திமுகவுக்கு வக்காலத்து வாங்குவது அல்ல. இது நமக்கு ஒரு பாடம். திமுக சந்தித்த நெருக்கடிகள் எல்லாம் அரசியல் களத்தில் விவரிக்கவே முடியாது. ஆனால், நாம் சந்தித்த நெருக்கடிகள் வேறு; அது திமுகவுக்கு கிடையாது.

விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது, இந்தக் கட்சிகள் எல்லாம் காணாமல் போய்விடும் என கூறினார்கள். இன்றைக்கு விஜய் வந்தவுடன் எவ்வளவு பயங்கரமான ஹைப். நம் மாநாட்டுக்கு எத்தனை லட்சம் பேர் வந்தார்கள், இத்தனை முக்கியத்துவம் கொடுத்து விவாதித்தார்களா? சினிமா ஹீரோவாகக்கூட இல்லை, திருமாவளவனால் எப்படி இத்தனை லட்சம் பேரை கூட்ட முடிந்தது என விவாதித்தார்களா? இது இந்தியா முழுக்கவே அப்படித்தான் உள்ளது.

ஆனால், 12 மணி... 1 மணி ஆனாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காத்துக் கிடக்கின்றனர். விஜய் ஆர்கானிக் மாஸ் என்கிறார்கள். அப்படியானால் விசிக என்ன இன்-ஆர்கானிக் மாஸா? திருமாவளவன் தலைமையில் ஆட்சி அமையும் என யாரேனும் விவாதித்தார்களா? திருமாவளவன் தலைமையில் கூட்டணி அமையும் என யாரேனும் சொன்னார்களா? நான் அப்படிச் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படவில்லை, இதுதான் இந்த சமூகம். இப்படித்தான் நம்மை குறைத்து மதிப்பீடு செய்கிறார்கள்.

ஆசை காட்டினால் நாம் வெளியேறி விடுவோம் என நினைக்கிறார்கள். திருமாவளவன் சராசரி அரசியல்வாதி இல்லை என்பதை காலம் சொல்லும். அதனை புரிந்துகொள்வதற்கு உங்களுக்கு பத்து ஆண்டுகள் தேவைப்படும். யார் புதிய புதிய கட்சிகளை தொடங்கினாலும், எவ்வளவு பெரிய புகழ் பெற்றவர்களாக இருந்தாலும் அவர்கள் விடுதலை சிறுத்தைகளுக்கு போட்டியாக வர முடியாது. நம் களம் முற்றிலும் வேறானது. இந்தக் களத்தில் யாரும் நம்மோடு போட்டிக்கு வரமுடியாது.

இதை நம்மால் மட்டுமே செய்ய முடியும்; இப்படி ஒரு இயக்கத்தை நடத்த முடியும். நாம் களத்தில் மக்களுக்காக உண்மையாக போராடினால் பீடம் நம்மை நோக்கி வரும். அதிகாரம் நம்மை நோக்கி வரும். அரசியல் நம்மை நோக்கி வரும் என்ற அடிப்படையை புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் பிரச்சினைகளுக்காக நாம் போராட வேண்டும்” என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x