Last Updated : 09 Nov, 2024 04:21 PM

1  

Published : 09 Nov 2024 04:21 PM
Last Updated : 09 Nov 2024 04:21 PM

“தமிழ் பல்கலை.க்கு ராஜராஜசோழன் பெயரை சூட்ட வேண்டும்” - சதய விழாவில் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பேச்சு

தஞ்சாவூரில்  மாமன்னன் ராஜராஜசோழனின் 1039 வது சதய விழாவில்  உரையாற்றிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் |  படம்: ஆர்.வெங்கடேஷ்

தஞ்சாவூர்: “தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துக்கு ராஜராஜசோழன் பெயரை சூட்ட வேண்டும்.” என ராஜராஜ சோழனின் சதய விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் கூறியுள்ளார்.

மாமன்னன் ராஜராஜசோழனின் 1039-வது ஆண்டு சதய விழா இன்று (நவ.9) காலை தஞ்சை பெரிய கோயிலில் தொடங்கியது. விழாவின் தொடக்கமாக சதயவிழாக் குழுத் தலைவர் து.செல்வம் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார்.

விழாவில் தொடக்கவுரையாற்றிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பேசியதாவது: தமிழ் மண்ணில் பல மன்னர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். ஆனால், சோழ வம்சத்தில் ஆட்சிபுரிந்த ராஜராஜ சோழனை மட்டும் ஏன் பெருமன்னன் என அழைக்கிறோம்?

முற்கால சோழர்கள் ஆட்சியின் போது ஏற்பட்ட போர் முறையால் ஆட்சியை களப்பிரர்களிடம் இழந்த சோழர்கள் மீண்டும் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அரியணை ஏறினர். இதையடுத்து சோழ மன்னர்களில் ஒருவரான விஜயாலய சோழனின் நிர்வாகத்தை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ராஜராஜ சோழன், முன்னோர்களை காட்டிலும் சிறந்த ஆட்சி நிர்வாகத்தை கொண்டு வந்தார்.

அதைத் தொடர்ந்து தஞ்சாவூரைச் சுற்றிலும் மக்கள் வாழ முக்கியத் தேவையான உணவு உற்பத்தியை தொடங்கினர். ராஜராஜ சோழன் காலத்தில் விவசாயம் செழித்தோங்கியது. விவசாயம் நன்றாக இருந்தாலும், தன்னுடைய நாட்டு மக்கள் அமைதியாக வாழ வேண்டும், அருகில் உள்ள அரசர்களின் படையெடுப்புகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தெற்கே குமரியில் தொடங்கி, வடக்கே துங்கபத்ரா நதி வரையுள்ள அரசர்கள் மீது போர் தொடுத்து, தன்னுடைய ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார் ராஜராஜசோழன்.

தன்னுடைய ஆட்சியின் எல்லையை விரிவுபடுத்திய பின்னர் ராஜராஜசோழன் சமயத்தையும், தமிழையும் வளர்க்கும் பணியில் ஈடுபடத் தொடங்கினார். அப்போது பல்லவர்கள் காலத்தில் காஞ்சியில் கட்டிய சில கோயில்களை பார்த்துவிட்டு, அதை விட நாம் சிறந்த கோயிலைக் கட்ட வேண்டும் எனக் கருதி 1006 -ம் ஆண்டு கட்டத் தொடங்கி, 1010-ல் கட்டி முடித்தது தான் இந்த தஞ்சாவூர் பெரிய கோயில். பின்னர் 1010-ம் ஆண்டு இந்த கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல கோயில்கள் உள்ளன. தமிழ் மக்கள் வாழும் இந்த தெய்வபூமியில் பிறந்தவர்கள் இயற்கையிலேயே புண்ணியம் செய்தவர்கள். இயற்கையிலேயே இறைவனுடைய அருளைப் பெற்றவர்கள். இயற்கையிலேயே ஒரு பண்பட்ட வாழ்க்கையை வாழ்கிறவர்கள். இந்த தெய்வ பூமியிலேயே தெய்வ வழிபாட்டுக்கு மாற்றாக, இறை உணர்வுக்கு மாற்றாக, எவர் ஒருவர் பேசினாலும், எவர் ஒருவர் சித்தாந்தம் பேசினாலும், அதற்கான கோட்பாடுகளை கொண்டு வந்தாலும், இந்த தமிழ் மண்ணில் எடுபடாது என்பதற்கு இந்த மக்கள் தான் சாட்சி.

திருவள்ளுவருடைய வழியை உள்வாங்கிக் கொண்ட ராஜராஜசோழன், பசியும், நோயும், பகையும் இல்லாத நாடாக உருவாக்கினார். இந்த மூன்றையும் உள்ளடக்கிய நாடாக எது நடக்கிறதோ, அது மன்னனாக இருந்தாலும், மக்களாட்சியாக இருந்தாலும், அந்த நாட்டை வழி நடத்தக்கூடியவனாக இருந்தாலும் அவன் தான் இந்த நாட்டை ஆளக்கூடிய தகுதி படைத்தவன்.அப்படிப்பட்டவனின் நாடு தான், ஒரு வளநாடு என்பதை உணர்ந்ததால் ராஜராஜசோழன், வள்ளுவன் வழியில் இறை நம்பிக்கையோடு ஆட்சி புரிந்தார்.

இந்த கோயில் ஆயிரம் ஆண்டுகளையும் கடந்து கம்பீரமாக நிற்கிறது என்றால், ராஜராஜசோழன் மட்டுமல்லாமல், இந்த கோயில் உள்ளே வீற்றிருக்கும் பெருவுடையாரின் சக்தியும் ஒரு காரணம். இது போன்று இறைவனுக்கு மிகப்பிரம்மாண்டமான கோயில்களை அமைத்தவர்கள் தான் தமிழ் மன்னர்கள். அதைத் தாண்டி தன்னுடைய காதலிக்கு கட்டிடம் கட்டியவர்கள் எல்லாம் மன்னர்கள் அல்ல, அப்படிப்பட்ட மன்னர்கள் தமிழ் மண்ணிலே இல்லை. ராஜராஜசோழனின் புகழ் இந்த உலகம் உள்ளளவும் நிலைத்து நிற்கும்.

அப்படிபட்ட ராஜராஜன் என்ற பெரு மன்னனுக்கு தமிழக அரசு இன்று அரசு விழா நடத்துகிறது. இந்த நேரத்தில் இன்னொன்றையும் நான் சொல்கிறேன். இந்த தஞ்சை மண்ணிலே இருக்கக்கூடிய தமிழுக்கு தொண்டாற்றக்கூடிய, தமிழுக்காக உருவாக்கப்பட்டுள்ள தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு, ராஜராஜ சோழன் பெயரை தமிழ்நாடு அரசு சூட்ட வேண்டும். அவ்வாறு செய்தால் அது பெருமன்னன் ராஜராஜனுக்கு செய்கிற சிறப்பாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பழநி ஆதீனம் சாது சண்முக அடிகளார், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா போன்ஸ்லே, முன்னாள் எம்எல்ஏ-வான எம்.ராமச்சந்திரன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சி.இறைவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x