Published : 09 Nov 2024 02:38 PM
Last Updated : 09 Nov 2024 02:38 PM

சென்னை டிபிஐ வளாகத்தில் ஜெராக்ஸ் வசதி இல்லை: மக்கள் வேதனை

கல்வித்துறை அலுவலகங்கள் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சென்னை டிபிஐ வளாகத்தில் ஜெராக்ஸ் வசதி இல்லாமல் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். அவர்கள் ஜெராக்ஸ் எடுப்பதற்காக நீண்ட தொலைவு செல்ல வேண்டியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் அமைந்துள்ளது டிபிஐ வளாகம். தற்போது பேராசிரியர் அன்பழகன் வளாகம் என அழைக்கப்படுகிறது.

இங்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகம், அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகம், தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகம், ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி பணிகள் கழகம், மாநில ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர், முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் அலுவலகம், தனியார் பள்ளிகள் இயக்குநர் அலுவலகம், தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் என கல்வித்துறை தொடர்புடைய அனைத்து தலைமை அலுவலகங்களும், தென்மண்டல சிபிஐ அலுவலகம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், மத்திய வெளியுறவுத்துறை கிளை செயலகம், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளிட்ட இதர மத்திய-மாநில அரசு அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.

பல்வேறு அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளதால் டிபிஐ வளாகத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவர்கள் அரசு சேவைக்காக ஏதேனும் சான்றிதழ்களை ஜெராக்ஸ் எடுக்க வேண்டுமானால் நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலை அல்லது எழும்பூர் கோ-ஆப்டெக்ஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. காரணம் டிபிஐ வளாகத்தில் ஜெராக்ஸ் எடுக்கும் வசதி கிடையாது.

ஏற்கெனவே வெளியூர்களில் இருந்து நீண்ட தூரம் பயணம் செய்து வருவோர் தேவையான சான்றிதழ்களை ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு வந்தாலும், புதிதாக ஏதேனும் ஒரு சான்றிதழை அல்லது கூடுதல் நகலுக்காக ஜெராக்ஸ் எடுக்க வேண்டுமானால் இங்கிருந்து நீண்ட தூரம் நடந்து சென்றுதான் ஜெராக்ஸ் எடுக்கிறார்கள்.

இன்னும் சிலர் டிபிஐ வளாகத்தில் கண்டிப்பாக ஜெராக்ஸ் வசதி இருக்கும் என்ற எண்ணத்தில் வளாகம் முழுவதும் சென்று அலைந்துபார்த்துவிட்டு இறுதியாக இல்லை என்று தெரிந்த பிறகு மிகவும் சோர்வடைந்து விடுகிறார்கள். மிகுந்த களைப்புடன் அருகே உள்ள பகுதிக்கு சென்று அவர்கள் ஜெராக்ஸ் எடுப்பதற்குள் அவர்களுக்கு போதும்போதும் என்றாகி விடுகிறது. எனவே, ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் டிபிஐ வளாகத்தில் ஜெராக்ஸ் வசதி ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x