Published : 09 Nov 2024 02:37 PM
Last Updated : 09 Nov 2024 02:37 PM
சென்னை ஜி.பி.சாலையில் டிரான்ஸ்பார்மர்களின் அடியில் குப்பைகளும், தேவையற்ற வயர்களும் குவிந்து கிடக்கின்றன. ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன்பாக அதிகாரிகள் குப்பைகளை அகற்றி, டிரான்பார்மர்களுக்கு பாதுகாப்பு தடுப்பு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னையில் இரு சக்கர வாகனங்களின் உதிரி பாகங்கள் விற்பனைக்கு பெயர்போனது புதுப்பேட்டை. அதேபோல கார் மற்றும் மற்ற இதர 4 சக்கர வாகனங்களின் உதிரி பாகங்கள் விற்பனைக்கு ஜி.பி.சாலை பெயர்பெற்றது. அண்ணாசாலையில் இருந்து ராயப்பேட்டை நோக்கி செல்லும் வழியில் அமைந்துள்ள ஜி.பி சாலையில் ஏராளமான வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் அமைந்துள்ளதால் தினந்தோறும் பரபரப்பாகவே காணப்படுகிறது. நெரிசல் மிகுந்த ஜி.பி.சாலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜி.பி.சாலையில் பூபேகம் தெரு சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் நீண்ட நாட்களாகவே குப்பைகூளங்களுடன் காட்சியளித்து வருகிறது. டிரான்ஸ்பார்மரை ஒட்டி அமைந்துள்ள குப்பை தொட்டிகள் பெரும்பாலும் நிரம்பி வழிவதால், பொதுமக்கள் குப்பைகளை டிரான்ஸ்பார்மரின் அடிப்பகுதியிலும், அதன் முன்பும் கொட்டிவிட்டு சென்றுவிடுகின்றனர். குப்பைகளை எடுத்து செல்லும் மாநகராட்சி ஊழியர்களும் குப்பை தொட்டியை மட்டும் சுத்தம் செய்துவிட்டு, டிரான்ஸ்பார்மரை கவனிக்காமல் சென்று விடுகின்றனர்.
இதனால் டிரான்ஸ்பார்மரை சுற்றி தெர்மோ கோல் அட்டைகள், தேவையில்லாத வயர்கள், உடைந்த வாகன உதிரி பாகங்கள் போன்றவை எப்போதுமே சிதறிக்கிடக்கின்றன. மேலும் ஒரு பழைய ஆட்டோ ஒன்று துருப்பிடித்த நிலையில் டிராஸ்பார்மர் நடுவே கிடக்கிறது. இது கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு மேலாகவே அங்கு இருப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இதுதவிர டிரான்ஸ்பார்மரையொட்டி செயல்படாத தள்ளுவண்டி கடை, கட்சி கொடி கம்பங்கள், டெலிபோன் கம்பங்கள் போன்றவை அமைந்துள்ளன.
இவையாவும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. அதேபோல ஜி.பி.சாலையில், சத்தியமூர்த்தி பவனை அடுத்துள்ள டிரான்ஸ்பார்மரும் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. அப்பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. தினந்தோறும் அங்குள்ள குப்பைத்தொட்டியில் உள்ள குப்பைகளை அகற்றும் துப்புரவு பணியாளர்கள் டிரான்ஸ்பார்மர் அடிப்பகுதியில் சேரும் குப்பைகளை கண்டுகொள்வதே இல்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்களும் டிரான்ஸ்பார்மரை சுற்றியே குப்பைகளை கொட்டிவிட்டு செல்வது வாடிக்கையாகிவிட்டது.
இதுதொடர்பாக ஜி.பி.சாலையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கூறியதாவது: ஜி.பி.சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. அதைச்சுற்றி பாதுகாப்பும் சரிவர இருப்பதில்லை. டிரான்ஸ்பார்மர் அருகிலேயே குப்பைதொட்டிகள் வைக்கப்படுவதால், குப்பைதொட்டிகள் நிறைந்தவுடன் டிரான்ஸ்பார்மர் அருகே குப்பைகளை கொட்டிவிடுகின்றனர். அதற்காக எந்த தடுப்பும் ஏற்படுத்தப்படவில்லை. மேலும் பல்வேறு தேவையற்ற வயர்கள் (பயன்படுத்தப்படாத) அடிப்பகுதியில் சுற்றிக்கிடக்கின்றன. மழைக்காலங்களில் இவை பெரிதும் ஆபத்தை ஏற்படுத்தும்.
மேலும் அதன் அருகே செல்லும் மக்களுக்கு ஆபத்தை கூட விளைவிக்கலாம். நெரிசல் மிகுந்த பகுதியில் இதுபோன்ற நிலையில், பார்ப்போரை முகம் சுளிக்க வைக்கிறது. கடந்து செல்வோர் மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் அளவுக்கு துர்நாற்றமும் வீசுகிறது. எனவே மாநகராட்சி குப்பை தொட்டியை வேறு இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும். டிரான்ஸ்பார்மர்களை சுற்றியுள்ள பகுதியை சுத்தம் செய்து, பாதுகாப்பு தடுப்புகள் அமைக்க வேண்டும். மழைக்காலங்களில் எந்த பிரச்சினையும் ஏற்படாத வண்ணம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரி கூறுகையில், “பொதுவாக குப்பைத் தொட்டிகள் நிரம்பிவிட்டால், பொதுமக்கள் குப்பைகளை அருகிலேயே கொட்டிவிட்டு சென்றுவிடுகின்றனர். மேலும் சிலர் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக தரம்பிரித்து போடுவதும் இல்லை. ஜி.பி.சாலையில் டிரான்ஸ்பார்மர் அருகே கொட்டப்படும் குப்பைகள் குறித்து புகார் பெறப்பட்டுள்ளது. உடனடியாக அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். குப்பைகளை டிரான்ஸ்பார்மர் அடிப்பகுதியில் கொட்டாமல் இருக்க தகுந்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் அங்கிருந்த குப்பைதொட்டிகளை அகற்றி வேறு இடத்தில் வைப்பதற்கு தற்போது இடமில்லை. இருந்தாலும் அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்படும்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT