Published : 09 Nov 2024 01:35 PM
Last Updated : 09 Nov 2024 01:35 PM
சென்னை: “ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குறைகளை சொல்லத்தான் செய்வார்கள். இதற்கான விடையை 2026 தேர்தலில் மக்கள் தெரிவிப்பார்கள்,” என்று இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் மண்டலம், 74-வது வார்டு புதிய வாழைமாநகரில் ரூ.93.25 கோடியில் புதிதாக இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. ஏகாங்கிபுரத்தில் ரூ.40 லட்சத்தில் பல்நோக்குக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இவற்றின் திறப்பு விழா இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் இன்று (நவ.9) நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா பங்கேற்று விளையாட்டு அரங்கையும், பல்நோக்கு கட்டிடத்தையும் திறந்துவைத்தார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில் நிதி பற்றாக்குறை இருந்த போதிலும், ஜிஎஸ்டி வரியில் தமிழகத்தின் பங்கு அளிக்கப்படாத நிலையிலும், தமிழகத்துக்கான வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்காத நிலையிலும் வளர்ச்சி பணிகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் புதிய புதிய திட்டங்கள், தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்புகள் அத்தனையும் நிறைவேற்றி ஒட்டுமொத்த இந்தியாவிலேயே வலிமை மிக்க தலைவராக முதல்வர் ஸ்டாலின் திகழ்கிறார்.
அரசிடம் நிதி இல்லாத நிலையிலும் மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை போன்ற திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை ஒதுக்கீடு செய்து மக்களின் வாழ்க்கையில் உயர்வை ஏற்படுத்தியிருக்கிறார். கிண்டியில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் திமுக அரசு வேகமாக செயல்பட்டு வருவதற்கான சான்றாகும். எதிர்க்கட்சிகள் குறைகளை சொல்லத்தான் செய்வார்கள். இதற்கான விடையை 2026 தேர்தலில் மக்கள் தெரிவிப்பார்கள்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக மேயர் பிரியா கூறியதாவது: “சென்னை வானிலை ஆய்வு மையம், சென்னை மாநகரப் பகுதியில் வரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளில் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த மாதம் 2 நாட்கள் பெய்த மழையின் போது மழை நீர் தேங்கிய பகுதிகள் சில கண்டறியப்பட்டுள்ளன. 24 மணி நேரத்துக்கு மேல் மழை நீர் தேங்கிய பகுதிகளில் வரும் நாட்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். இந்த பகுதிகளில் மோட்டார் மூலமாக மழைநீர் வெளியேற்றவும், மழைநீர்வடிகால்களில் இணைப்பு ஏற்படுத்தி வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சிகளில், தாயகம் கவி எம்எல்ஏ, மத்திய வட்டார துணை ஆணையர் கே.ஜெ.பிரவீன் குமார், மண்டலக்குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT