Published : 09 Nov 2024 01:41 PM
Last Updated : 09 Nov 2024 01:41 PM
சென்னை: “சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்தில் 2022 மற்றும் 2023 ஆம் நிதியாண்டில் 50 கி.மீ. நீளத்துக்கு புதியதாக மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. தற்போது அடையாறு மண்டலத்தில் 175 கி.மீ நீளமுள்ள மழைநீர் வடிகால்களில் இரண்டாம் கட்டமாக 166 கி.மீ. வரை வண்டல்கள் தூர்வாரப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகிறது” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை வேளச்சேரி எம்ஆர்டிஎஸ் அருகில் உள்ள ரயில்வே சாலை வடக்குப் பகுதியில் வெள்ளப் பாதிப்பைத் தடுத்திடும் வகையில் வெட்டப்பட்டுள்ள குளத்தினை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (நவ.9) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது: “சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்தில் 2022 மற்றும் 2023 ஆம் நிதியாண்டில் 50 கி.மீ. நீளத்துக்கு புதியதாக மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. தற்போது அடையாறு மண்டலத்தில் 175 கி.மீ நீளமுள்ள மழைநீர் வடிகால்களில் இரண்டாம் கட்டமாக 166 கி.மீ. வரை வண்டல்கள் தூர்வாரப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், அடையாறு, தெற்கு பக்கிங்காம் கால்வாயில் 3.7 கி.மீ. நீளத்துக்கும், மத்திய பக்கிங்ஹாம் கால்வாயில் 1.4 கி.மீ. நீளத்துக்கும், கிண்டி தொழிற்பேட்டை கால்வாயில் 1.9 கி.மீ. நீளத்துக்கும், செல்லம்மாள் கல்லூரி கால்வாயில் 0.4 கி.மீ. நீளத்துக்கும், மாம்பலம் கால்வாயில் 0.85 கி.மீ. நீளத்துக்கும், ரெட்டிக்குப்பம் கால்வாயில் 0.5 கி.மீ. நீளத்துக்கும், ராஜ்பவன் கால்வாய் மற்றும் வீராங்கல் ஓடை ஆகிய கால்வாய்களில் 1 கி.மீ. நீளத்துக்கும் வண்டல்கள் தூர்வாரப்பட்டுள்ளது.
அரங்கநாதன் சுரங்கப்பாதையில் உள்ள கிணறுகள் மற்றும் நீர் தொட்டிகளில் வண்டல்கள் தூர்வாரப்பட்டுள்ளது. வீராங்கல் ஓடை மற்றும் பக்கிங்காம் கால்வாய் நீர்மட்டம் உயரும் போது மழைநீர் வடிகால் மூலமாக ஓடைகளில் மழைநீர் செல்ல முடியாத நிலை ஏற்படுவதால் குடியிருப்புப் பகுதிகளில் நீர் தேக்கத்தை தடுக்க தடுப்பு (Shutter) நிறுவி மோட்டர் பம்புகள் அமைக்கப்பட்டு நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மிக அதிக கனமழைக் காலங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு அடையாறு மண்டலத்துக்கு சொந்தமான 25 எண்ணிக்கையிலான மோட்டார் பம்புகள், 20 எண்ணிக்கையிலான மின்சார பம்புகள் மட்டுமன்றி, 52 எண்ணிக்கையிலான டிராக்டர் மோட்டார் பம்புகள் மற்றும் 100 குதிரைத் திறன் கொண்ட 23 எண்ணிக்கையிலான மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது.
வேளச்சேரி பகுதியிலிருந்து மழைநீர் வெளியேறும் பகுதியான 6 சிறுதுளை கால்வாய் (6 Vent Culvert) பகுதியில் ரூ.27.60 லட்சம் மதிப்பீட்டில் முழுமையாக தூர்வாரப்பட்டுள்ளது. மேலும், அடையாறு மண்டலமானது, அடையாறு உபநீர் வடிநிலம் மற்றும் கோவளம் உபரிநீர் வடிநிலம் சேர்ந்த பகுதியாகும். வேளச்சேரிக்குட்பட்ட வார்டுகள் 172, 175, 176, 177 மற்றும் 178 ஆகிய பகுதிகளில் உள்ள மழைநீர் முழுமையாக வீராங்கல் ஓடை மூலமாகவும், ரயில்வே பாலத்துக்கு குறுக்கே உள்ள 6 சிறுதுளை கால்வாய் (6 Vent Culvert) மூலமாக சதுப்பு நிலத்தை அடைகிறது. வீராங்கல் ஓடை முழுவதுமாக தூர்வாரப்பட்டு மழைநீர் தேங்காமல் வடிவதற்கு ஏதுவாக உள்ளது.
வேளச்சேரியில் பெரும் மழையின்போது வெள்ளப் பெருக்கு ஏற்படுவதை தடுப்பதற்காக இவ்வாறு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், கிண்டி மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் ஏற்கனவே இருக்கும் குளங்கள் பெரிதாக்கப்பட்டும், 4.50 மில்லியன் கன அடி மழைநீர் சேகரிக்கும் விதமாக புதியதாக 4 குளங்கள் வெட்டும் பணிகளில் 2 குளங்களுக்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 2 குளங்களுக்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
6 சிறுதுளை கால்வாய் (6 Vent Culvert) தூர்வாரப்படுவது மட்டுமல்லாமல். அதன் முன்புள்ள அரசு நிலங்களில் குளங்கள் அமைக்கப்பட்டு வேளச்சேரி பகுதியில் மழைநீர் தேங்காவண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறைக்கு சொந்தமாக எம்.ஆர்.டி.எஸ். சாலையினையும், பெருநகர சென்னை மாநகராட்சி வசம் ஒப்படைக்க முடிவு எடுக்கப்பட்டதின் அடிப்படையில் அவசர அவசியத்தை முன்னிட்டு, ரூ.23.94 லட்சம் மதிப்பில் இச்சாலையினை அணுகியுள்ள மழைநீர் வடிகால்களில் தூர்வாருதல் மற்றும் பழுதுப்பார்த்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், எம்.ஆர்.டி.எஸ். சாலை வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அரசு நிலங்களில் புதிதாக குளம் வெட்டி நீர் தேக்கம் மற்றும் பூங்கா முதலானவைகள் அமைப்பதற்கும் முடிவு செய்யப்பட்டு, தற்போது 13,800 சதுர மீட்டர் பரப்பளவில் குளம் வெட்டும் பணி முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் ஏற்படா வண்ணம் தடுக்கப்படும். இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் டான்சி நகர், பேபி நகர், புவனேஸ்வரி நகர், வி.ஜி.பி. செல்வா நகர், வீனஸ் காலனி, அன்னை இந்திரா நகர் மற்றும் அண்ணா நகர் பகுதி வாழ் மக்களின் வெள்ளப் பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும்” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT