Published : 09 Nov 2024 12:18 PM
Last Updated : 09 Nov 2024 12:18 PM
சென்னை: தமிழ் செம்மொழிக்கான சேவை மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டோருக்கு கடந்த 9 ஆண்டுகளாக வழங்கப்படாத தொல்காப்பியர் விருது, குறள் பீடம் விருது, இளம் அறிஞர் விருது ஆகியவற்றை உடனடியாக வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “செம்மொழிக்கு சிறந்த முறையில் சேவையாற்றியவர்களுக்காக செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வாயிலாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் தொல்காப்பியர் விருது உள்ளிட்ட குடியரசுத் தலைவர் விருதுகள் கடந்த 9 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. அன்னை தமிழுக்கு அறிஞர்கள் சேவை செய்வதை ஊக்குவிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட இந்த விருதுகள் கிட்டத்தட்ட ஒரு பத்தாண்டாக வழங்கப்படாதது தமிழுக்கு இழைக்கப்படும் துரோகமும், தமிழ் வளர்ச்சிக்கு போடப்படும் முட்டுக்கட்டையும் ஆகும்.
செம்மொழியாக பல்வேறு மொழிகள் அறிவிக்கப்பட்டிருக்கும் போதிலும், தமிழுக்கு மட்டும் தான் தன்னாட்சி அதிகாரத்துடன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஓர் இந்திய தமிழறிருக்கு தொல்காப்பியர் விருது, தலா ஓர் இந்தியர், ஓர் வெளிநாட்டு அறிஞர் என இருவருக்கு குறள் பீடம் விருதுகள், முப்பதிலிருந்து நாற்பது வயதிற்குட்பட்ட இந்திய இளம் அறிஞர்கள் 5 பேருக்கு இளம் அறிஞர் விருது என மொத்தம் 8 விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 2015-16 ஆம் ஆண்டு வரை தொல்காப்பியர் விருதுகள், பிற விருதுகளில் பெரும்பான்மையும் வழங்கப்பட்ட நிலையில் அதன் பின் கடந்த 9 ஆண்டுகளாக எந்த விருதும் வழங்கப்படவில்லை.
2005-06ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட இந்த விருதுகள் ஆண்டுக்கு 8 பேர் வீதம் கடந்த 20 ஆண்டுகளில் மொத்தம் 160 பேருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை வெறும் 66 பேருக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது வழங்கப்பட வேண்டிய விருதுகளில் பாதிக்கும் குறைவாக 41.25% மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. கடந்த 9 ஆண்டுகளில் இந்த விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணிகள் பல்வேறு நிலைகளில் உள்ளன.
கடந்த 2021-22ஆம் ஆண்டு வரை இந்த விருது பெற தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றில் பல ஆண்டுகளுக்கு தகுதியானவர்களின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் பின், கடந்த சில ஆண்டுகளாக இந்த விருதுக்கு விண்ணப்பங்கள் கோரப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மொழிசார்ந்த விருதுகள் அறிவிக்கப்படுவதன் நோக்கமே, அந்த மொழி குறித்த ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் ; மொழியில் புதிய படைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும்; ஒரு மொழியில் உருவாக்கப்பட்ட படைப்புகள் பிற மொழியில் மொழிபெயர்க்கப்படுவதும், பிறமொழியின் சிறந்த படைப்புகள் சம்பந்தப்பட்ட மொழிக்கு மாற்றம் செய்யப்படுவது ஊக்குவிக்கப்படவேண்டும் என்பது தான். ஆனால் கடந்த 9 ஆண்டுகளாக எந்த விருதும் வழங்கப்படாத நிலையில், தமிழ் மொழி குறித்த ஆராய்ச்சிகளிலும் படைப்புருவாக்கத்திலும் ஈடுபடும் அறிஞர்களின் எண்ணிக்கை குறையும். அதற்கு அரசே காரணமாக இருக்கக்கூடாது.
தமிழ் செம்மொழிக்கான சேவை மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டோருக்கு கடந்த 9 ஆண்டுகளாக வழங்கப்படாத தொல்காப்பியர் விருது, குறள் பீடம் விருது, இளம் அறிஞர் விருது ஆகியவற்றை உடனடியாக வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, சென்னையில் செயல்பட்டு வரும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு மத்திய பல்கலைக் கழகத்திற்கு இணையான தகுதி வழங்கி, அதன் வாயிலான மொழி ஆராய்ச்சிகளை அதிகரிக்கவும் மத்திய அரசு முன்வரவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT