Published : 09 Nov 2024 08:56 AM
Last Updated : 09 Nov 2024 08:56 AM

“தமிழ் தேசியம் என்ற பெயரில் திராவிடத்தை எதிர்ப்பது ஆபத்தானது” - சத்யராஜ் கருத்து

சென்னை: “தமிழ் தேசியம் என்ற பெயரில் எதிர்த்து ஆரியத்திற்கு துணை போவது மிகவும் ஆபத்தானது” என்று நடிகர் சத்யராஜ் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (நவ.8) ‘திராவிடமே தமிழுக்கு அரண்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட சத்யராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: திராவிடத்தை ஆரியம் எதிர்க்கலாம். ஆனால், தமிழ் தேசியம் என்ற பெயரில் திராவிடத்தை எதிர்த்து ஆரியத்திற்கு துணை போவது மிகவும் ஆபத்தானது. ஆரியத்துக்கு துணை போனால் மீண்டும் சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகள் என மூடநம்பிக்கைகள் மேலோங்கும். தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ள இக்காலத்தில் நமக்கு இருமொழிக் கொள்கை தான் முக்கியம்..

தமிழ்நாட்டுக்கு வடமாநிலத்தவர் நிறைய பேர் வேலை பார்க்க வருகின்றனர். அவர்களுக்கும் திராவிடத்தை நாம் கொண்டு செல்ல வேண்டும். அவர்களுக்குப் புரிந்த மொழியில் எடுத்துரைக்க வேண்டும். வட மாநிலங்களில் சாதியப் பிரச்சினைகள் அதிகம். இங்கே வேலைக்கு வரும் பெரும்பாலான வட மாநிலத்தவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே. அவர்கள் இங்கே வேலை பார்க்க வருகின்றனர் என்றால், இங்கு சாதிய ஒடுக்குமுறை இல்லை, மதக் கலவரங்கள் இல்லை. நிம்மதியாக வாழலாம் என்று வருகின்றனர். இதற்கு திராவிடம் தான் காரணம் என்று புரிய வைக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் அவர்களுடைய சொந்த ஊர்களுக்குச் சென்று தமிழ்நாட்டைப் பற்றி பேசுவார்கள். இங்கே வட மாநிலத்தவர் சிறுசிறு வேலை நிமித்தமாக அதிகமாக வருகிறார்கள் என்றால், அதற்கு இங்குள்ளவர்கள் வேலை செய்யத் தயாராக இல்லை என்று அர்த்தமில்லை, சிறிய வேலைகளைத் தாண்டி பெரிய இடத்தில் வேலை செய்யும் சூழலில் இங்குள்ளவர்கள் உயர்ந்து இருக்கிறார்கள் என்றே அர்த்தம். இவ்வாறு அவர் பேசினார்.

அண்மையில் தவெக முதல் மாநில மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய், “திராவிடமும் தமிழ் தேசியமும் கொள்கை அளவில் ஒன்றே” எனப் பேசியிருந்தார். அதற்கு நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றாக முடியாது என்று அவர் விளக்கி தொடர்ந்து பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் திராவிடம் தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜ் “தமிழ் தேசியம் என்ற பெயரில் எதிர்த்து ஆரியத்திற்கு துணை போவது மிகவும் ஆபத்தானது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

அஜித்துக்கு பாராட்டு... மேலும் அதே மேடையில் நடிகர் அஜித்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் சத்யராஜ். அண்மையில் பைக் டூர் ஒன்றின் ஊடாக அஜித் பேசிய வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் அஜித், “மதம் நீங்கள் இதுவரை சந்திக்காத மக்கள் மீது வெறுப்பைத் தூண்டும் என்று ஒரு வாசகம் உள்ளது. அது உண்மை தான். மதம், சாதி எதுவாக இருந்தாலும் சரி. மனிதர்களை சந்திக்காத முன்பே அவர்கள் மீதான தவறான மதிப்பீடுகளை செய்து விடுகிறோம்.

நீங்கள் பயணங்கள் மேற்கொண்டால் வெவ்வேறு தேசம், மதம், கலாசாரத்தைச் சேர்ந்த மக்களை காண்பீர்கள். இதன்மூலம், நம்மைச் சுற்றியுள்ள மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியும். பயணம் உங்களை நல்ல மனிதனாக்கும்” என்று பேசியிருந்தார். இதனை மேற்கோள் காட்டி சத்யராஜ் நடிகர் அஜித்துக்கு பாராட்டு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x