Published : 09 Nov 2024 06:15 AM
Last Updated : 09 Nov 2024 06:15 AM

ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு நிறுவிய ‘கலாம்-சபா' நூலகம்: வியாசர்பாடியில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை திறந்துவைத்தார்

சென்னை வியாசர்பாடி மல்லிகைப்பூ காலனியில், ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு நிறுவிய ‘கலாம் - சபா’ நூலகம், வழிகாட்டி மையத்தை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்தார். உடன் காவல்துறை ஐஜி பா.சாமுண்டீஸ்வரி, தோல் ஏற்றுமதி குழும செயல் தலைவர் இரா.செல்வம், ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு உள்ளிட்டோர். | படம்: ம.பிரபு | 

சென்னை: சென்னை வியாசர்பாடியில் ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு நிறுவிய ‘கலாம்-சபா' நூலகத்தை விஞ்ஞானி மயில்சாமி அண்ணா துரை நேற்று திறந்துவைத்தார். சென்னை வியாசர்பாடி மல்லிகைப்பூ காலனியில் பிறந்தவர் ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு. இவர் தனது இல்லத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான நூலகம் மற்றும் வழிகாட்டி மையத்தை நிறுவியுள்ளார். இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று, நூலகத்தை திறந்துவைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: டில்லிபாபுவின் இந்த முயற்சி, அவரைப்போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்கும். உச்சம் தொட்ட ஒவ்வொருவருக்கும் பின்னால் ஒருவர் இருப்பார். வியாசர்பாடியில் உயர இருப்பவர்களுக்கு பின்னால் கலாம்-சபா நூலகம் இருக்கும். வியாசர்பாடியில் இருந்ததால் தான் உயர முடிந்தது என்ற நிலையை இந்த நூலகமும், டில்லிபாபுவின் முயற்சியும் உருவாக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தோல் ஏற்றுமதி குழும செயல் தலைவர் இரா.செல்வம்பேசும்போது, ‘‘பிறந்த மண்ணையும், மக்களையும் நேசிக்கும் ஒருவர் மட்டுமே இவ்வாறு சிந்தித்து, தனது வீட்டை நூலகமாக மாற்ற முடியும். அவரது சமூகத்தை கட்டமைக்கும் முயற்சியும், அந்த சமூகத்துக்கு அறிவியலை கொண்டுசெல்வதும் பாராட்டுக்குரியது’’ என்றார்.

காவல்துறை ஐஜி பா.சாமுண்டீஸ் வரி பேசும்போது, ‘‘இதுபோன்று உதவ பலருக்கு விருப்பம் இருந்தாலும், அங்கு வருவோரால் ஏற்படும் பாதுகாப்பின்மை, தனியுரிமை பாதிப்பு போன்ற காரணங்களால் பலர் முன்வருவதில்லை. மாணவர்கள் தான் எனது வீட்டுக்கு பாதுகாப்பு என வீட்டை நூலகமாக டில்லிபாபு மாற்றியுள்ளார்’’ என்றார்.

விஞ்ஞானி டில்லிபாபு பேசும்போது, ‘‘இந்த நூலகத்தில் 9-ம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு மேற்கொள்ளும் மாணவ, மாணவியர் அனுமதிக்கப்படுவார்கள். பாடங்களை படிக்கும் வரை நான் ரயில்வே பொறியாள ராக இருந்தேன். அப்துல் கலாமின் அக்கினி சிறகுகள் நூலை படித்த பிறகு தான் விஞ்ஞானி ஆனேன். பாடங்கள் எனக்கு பட்டத்தை கொடுத்தது. வாசிப்பு எனக்கு வாழ்க்கை கொடுத்தது. மாணவர்களுக்கு வாழ்க்கையை கொடுக்கவே இங்கு நூலகம் அமைத்திருக்கிறேன்.

இங்கு மாணவர்களுக்கு அடுத்து என்ன படிக்க வேண்டும் என வழிகாட்டுதல் வழங்கப்படும். மாதந்தோறும் உச்சம் தொட்ட வல்லுநர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். 5 மாணவர்களை தேர்வு செய்து, வழி காட்டப்படும். பொருளாதாரம தடையாக இருந்தால், அதை கலாம்- சபா நூலகமே ஏற்கும். இந்த நூலகம் ஒரு கலங்கரை விளக்கமாக அமை யும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் முன்னதாக டில்லிபாபுவின் பெற்றோர் விஜயகுமார் - விக்டோரியா ஆகியோரை விருந்தினர்கள் அனைவரும் கவுரவித்தனர். இந்நிகழ்வில் டில்லிபாபுவின் மனைவி செல்வி, மகள் இலக்கியா, கவிஞர் பிரியசகி, உதவி தலைமை யாசிரியர் மெ.ஞானசேகரன் உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x