Published : 09 Nov 2024 04:27 AM
Last Updated : 09 Nov 2024 04:27 AM

மதுபாட்டிலுக்கு கூடுதல் பணம் வாங்குவதை தடுக்க டாஸ்மாக் கடைகளில் ‘பில்’ வழங்கும் முறை விரைவில் அறிமுகம்

பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை கூடுதலாக வாங்குவதை தடுக்க தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் ‘பில்’ வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. அந்தவகையில், இதுதொடர்பாக டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2 நாள் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுப்பாட்டில்களுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. அதிகாரிகளும் அவ்வப்போது டாஸ்மாக் கடைகளில் ஆய்வு நடத்தி, கூடுதலாக வசூலிக்கும் கடை ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்வது, அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். ஆனாலும், இந்த குற்றச்சாட்டு சம்பவங்கள் குறைந்தபாடில்லை.

எனவே, மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்க, ‘உற்பத்தி முதல் விற்பனை வரை’ திட்டத்தை டாஸ்மாக் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. மதுபாட்டில் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலையிலேயே, மதுபாட்டில்கள் மீது, விற்பனை விலையுடன் கூடிய ‘க்யூ-ஆர்’ கோடு ஒட்டப்படும். அந்த மதுபாட்டில்கள், தொழிற்சாலையை விட்டு வெளியேகொண்டு வருவது முதல் மதுபாட்டில்கள் விற்பனையாவது வரை ‘க்யூ-ஆர்’ கோடு மூலம் அவை கண்காணிக்கப்படுகின்றன. இதன்மூலம், மதுபாட்டில்களுக்கு கூடுதலாக பணம் பெறுவது தவிர்க்கப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே விற்பனை செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்தவகையில், க்யூ-ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, மின்னணு பரிவர்த்தனை வழியாக பணம் செலுத்தி மதுபானங்களுக்கு ‘பில்’ பெறும் வசதியை டாஸ்மாக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. முதல்கட்டமாக ராமநாதபுரம், ராணிப்பேட்டையில் தலா 10 கடைகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வசதி சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ச்சியாக பல்வேறு கடைகளில் சோதனையில் முறையில் பில் வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் மின்னணு பரிவர்த்தனை வழியாக பணம் செலுத்தி மதுபானங்களுக்கு பில் பெறும் முறையில் ‘உற்பத்தி முதல் விற்பனை வரை’ திட்டத்தை ஊழியர்கள் பயன்படுத்துவது குறித்து டாஸ்மாக் பணியாளர்களுக்கு டாஸ்மாக் நிறுவனம் சார்பில் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. அந்தவகையில், நவ.9 மற்றும் 10-ம் தேதி ஆகிய 2 நாட்கள் அனைத்து மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் தாலுகா வாரியாக பணியாளர்களுக்கு, அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x