Published : 09 Nov 2024 02:46 AM
Last Updated : 09 Nov 2024 02:46 AM
வேலூர்: மேட்டூர் உள்ளிட்ட எந்த அணையிலும் தூர்வார இயலாது என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு டிஎஸ்பி அலுவலகத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரியின் குறுக்கே ஆதனூர், குமாரபாளையம், புங்கனூர் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை பணிகள் நிறுத்தப்பட்டதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கொஞ்சம்கூட ஆதாரம் இல்லாமல் பேசியிருக்கிறார். அந்த திட்டம் அதிமுகவால் தொடங்கப்பட்டதுதான். ஆனால், சரியாக ஆய்வு நடத்தாமல் தொடங்கப்பட்ட திட்டம் அது. இடத்தை தேர்வு செய்வதில்கூட தவறு செய்துள்ளனர். இதைப்பற்றி சட்டப்பேரவையில் அவர் பேசினால், உரிய பதில் அளிப்பேன்.
அணைகளில் எங்கும் தூர்வார முடியாது. எந்த நாட்டில் தூர்வாரி இருக்கிறார்கள்? மேட்டூர் அல்லது வேறு எந்த அணையாக இருந்தாலும், அணைக்கு கீழே மணல் வந்து ஆற்றில் சேரும். அந்த ஆற்று மணலை நாம் எடுத்து வருகிறோம். அணையை யாரும் தூர்வார மாட்டார்கள். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
ஒப்பந்தம் கோரப்பட்டதா? - மேட்டூர் அணையில் 611.81 மில்லியன் கனமீட்டர் அளவுக்கு வண்டல் மண் சேர்ந்துள்ளதாகவும், முதல்கட்டமாக 4.005 மில்லியன் கனமீட்டர் அளவிலான வண்டலைதூர்வாரத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்குத் தேவையான சுற்றுச்சூழல் அனுமதிகளைப் பெற உதவும் வகையில் ஆலோசனைநிறுவனத்தை தேர்வு செய்வதற் கான ஒப்பந்தத்தை தமிழக நீர்வளத் துறை கோரியுள்ளதாகவும் தகவல்கள் பரவின.
மேலும், மத்திய அரசின் நீர் மற்றும் மின்சார ஆலோசனை சேவை மையம், நீர்வளத் துறை இணைந்து மேட்டூர் அணையை தூர்வாருவதற்கான சாத்தியக் கூறு அறிக்கையை தயாரித்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில்தான், தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மேட்டூர் உள்ளிட்ட எந்த அணையையும் தூர்வார முடியாது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT