Published : 08 Nov 2024 06:10 AM
Last Updated : 08 Nov 2024 06:10 AM

பதிவு நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர்கள் பணியாற்றினால் கடும் நடவடிக்கை: மருத்துவ கவுன்சில் பதிவாளர் எச்சரிக்கை

கோப்புப் படம்

சென்னை: மருத்துவக் கவுன்சிலில் இருந்து பதிவு நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர்கள், விதிகளுக்கு புறம்பாக தொடர்ந்து பணியாற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில மருத்துவக் கவுன்சில் பதிவாளர் டாக்டர் காமராஜ் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: மருத்துவ அலட்சியம், நெறியற்ற கட்டண விதிப்பு, தொழில்சார்ந்த தவறுகள், முறைகேடுகள் என பல்வேறு புகார்கள் டாக்டர் எஸ்.தினேஷ் (பதிவு எண் 61971) என்பவர் மீது முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில் அந்த புகார்களில் முகாந்திரம் இருப்பது உறுதி செய்யப்பட்டு டாக்டர் தினேஷ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, ஓராண்டுக்கு மருத்துவக் கவுன்சில் பதிவேட்டிலிருந்து அவரது பெயர் நீக்கப்பட்டது. இதன் மூலம் அடுத்த ஓராண்டுக்கு அவர் மருத்துவ சேவைகள் ஆற்ற முடியாது. இந்த உத்தரவு நகலினை அனுப்பியபோது, சம்பந்தப்பட்ட முகவரியில் அவர் இல்லை.

இதையடுத்து, டாக்டர் தினேஷ் மருத்துவப் பணியில் உள்ள இடத்தைக் கண்டறிந்து அவரிடம் நேரடியாக மருத்துவக் கவுன்சிலின் உத்தரவு வழங்கப்பட்டது. அதற்கு ஆட்சேபம் தெரிவிக்கும்பட்சத்தில் அதுகுறித்து 60 நாள்களுக்குள் தேசிய மருத்துவ ஆணையத்தில் முறையிடலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யாமல், விதிகளுக்குப் புறம்பாக தொடர்ந்து மருத்துவப் பணியில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, இதுதொடர்பாக மருத்துவமனை நிறுவனச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவ சேவைகள் மற்றும் ஊரக நலத் துறை இயக்குநரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது. மற்றொருபுறம் அவர் பணியில் உள்ள தேனி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளரிடமும் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவக் கவுன்சிலில் இருந்து நீக்கப்பட்ட எவரும் மருத்துவப் பணியை தொடரக் கூடாது என்பது விதி. அத்தகைய நபர்களை மருத்துவமனைகள் பணியமர்த்துவதும் விதிகளுக்கு புறம்பான செயல். இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதிப்பு மற்றும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x