Published : 08 Nov 2024 06:04 AM
Last Updated : 08 Nov 2024 06:04 AM
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் 70-வது பிறந்தநாள் நேற்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவருக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: பிறக்கும் புதுமைகளுக்கெல்லாம் இந்தியத் திரையுலகின் வாயிற்கதவுகளைத் திறக்கும் கலைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். திரைக்களம் தொடங்கி அரசியல் களம் வரை முற்போக்கு, பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புரை செய்யும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் தொண்டு சிறக்க விழைகிறேன்.
துணை முதல்வர் உதயநிதி: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கலைஞானி என போற்றப்பட்ட திரையுலகின் பேராளுமை. திமுக தலைவரின் அன்பு நண்பராக, திமுகவோடு கரம் கோத்து ஓரணியாய் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் முற்போக்கு முகம். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். மதவாத, பிளவுவாத அரசியலை சரியான தளத்தில் நின்று எதிர்த்து வரும் அவரது பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்.
இதேபோல், கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் திரைத்துறையினர் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது ஒரு புறமிருக்க கட்சித் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாளை, மாநிலம் முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்கி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கொண்டாடினர். இதன் பகுதியாக சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம், துணைத் தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, தங்கவேலு ஆகியோர் தலைமை தாங்கினர்.
வருகை தந்திருந்த நிர்வாகிகள், தொண்டர்கள் முன்னிலையில் கேக் வெட்டி, இனிப்பு வழங்கி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. மேலும், நலிந்த நிலையில் உள்ள நிர்வாகிகளில் முதல்கட்டமாக 20 பேருக்கு ரூ.10 ஆயிரம், விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி, அனைவருக்கும் மதிய விருந்து ஆகியன வழங்கப்பட்டது.
நிர்வாகிகள் 70 பேர் உடல் தானம் செய்தனர். நிகழ்வில், மாநிலச் செயலாளர்கள் செந்தில் ஆறுமுகம், முரளி அப்பாஸ், வைத்தீஸ்வரன், ராகேஷ், மண்டலச் செயலாளர் மயில்வாகனன், செயற்குழு உறுப்பினர் சினேகா மோகன்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT