Published : 19 Aug 2014 11:46 AM
Last Updated : 19 Aug 2014 11:46 AM

பார்வை குறைபாட்டால் நிராகரிக்கப்பட்ட இளைஞருக்கு பாதுகாப்பு படையில் பணி: உயர் நீதிமன்றம் உத்தரவு

பார்வைக் குறைபாடு காரணமாக நிராகரிக்கப்பட்ட மதுரை இளைஞருக்கு மறுபரிசோதனையில் பார்வை நன்றாக உள்ளதாக தெரியவந்ததால், வேலை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை வடக்குமாசி வீதியை சேர்ந்த ஆர்.மோகனசுந்தரம் (24), உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:

எல்லை பாதுகாப்புப்படை, மத்திய தொழில் பாதுகாப்புப்படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு ஆட்கள் தேர்வு செய்வது தொடர்பாக மத்திய பாதுகாப்புப்படை பணியாளர்கள் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அந்த பணிக்குரிய உடற்தகுதி தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்றேன். பின்னர், கண்பார்வை குறைபாடு இருப்பதாகக் கூறி, என்னை தேர்வு செய்ய மறுத்துவிட்டனர்.

எனது பார்வைத் திறனை மீண்டும் பரிசோதிக்க மனு கொடுதேன். மறு பரிசோதனையில் எனக்கு பார்வை நன்றாக இருப்பதாக மருத்துவக்குழு சான்றிதழ் வழங்கியது.

அதன்படி எனக்கு வேலை வழங்கக்கோரி 2012-ல் மனு கொடுத்தேன். அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எனது லட்சியம் நிறைவேறாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனக்கு வேலை வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது

இந்த மனு நீதிபதி கே.கே. சசிதரன் முன் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பாஸ்கர்மதுரம் வாதிட்டார். விசாரணைக்கு பின், மனுதாரரின் கண்பார்வை நன்றாக உள்ளதாக மருத்துவக்குழு சான்று அளித்துள்ளது. அதன் அடிப்படையில் மனுதாரர் மீண்டும் வேலை கேட்டு 21.4.2012 அன்று மத்திய பாதுகாப்புப்படை பணியாளர்கள் தேர்வாணைய மண்டல இயக்குநருக்கு மனு அனுப்பியுள்ளார் அந்த மனுவை 2 மாதத்துக்குள் பரிசீலித்து வேலை வழங்கி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x