Published : 27 Apr 2014 10:00 AM
Last Updated : 27 Apr 2014 10:00 AM

ஆரோக்கியம் என்பது மனித உரிமை

ஆரோக்கியம் என்பது மனித உரிமை. அந்த உரிமையைப் பாதுகாப்பதில் இந்திய அறிவுசார் சொத்துரிமை சட்டங்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்று நீதிபதி கே.என்.பாஷா குறிப்பிட்டார். உலக அறிவுசார் சொத்து ரிமை தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

அந்தக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்து இந்திய அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவரான நீதிபதி கே.என்.பாஷா பேசியதாவது:

ஆரோக்கியம் என்பது மனித உரிமை. அந்த உரிமையை பாதுகாக்கும் விதத்தில் இந்திய அறிவுசார் சொத்துரிமை சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உயிர் காக்கும் மருந்துகள் கிடைப்பதை இந்த சட்டங்கள் உறுதி செய்கின்றன.

புற்றுநோய் சிகிச்சைக்காக பாயர் என்ற மருந்து உற்பத்தி நிறுவனத்தின் நேக்சவார் என்ற மருந்தை வாங்கினால் மாதம் ஒன்றுக்கு ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் செலவிட வேண்டியிருக்கும். அதே மருந்தை நாட்கோ என்ற நிறுவனம் மாதம் ரூ.8 ஆயிரத்து 800 என்ற மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்வதாகக் கூறி, இந்தியாவில் இந்த மருந்தை தயாரிக்க கட்டாய உரிமம் கோரியது. ஆனால் இதற்கு பாயர் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த இந்திய அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு தீர்ப்பாயம், பாயர் நிறுவனத்தின் மருந்து மக்களால் வாங்கக் கூடிய விலையில் இல்லாததால், நாட்கோ நிறுவனத்தின் மருந்துக்கு கட்டாய உரிமம் வழங்குவதில் தவறில்லை என்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது என்றார் நீதிபதி பாஷா.

மாலையில் நடைபெற்ற நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியும், அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முன்னாள் தலைவருமான நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் கருத்தரங்கை நிறைவு செய்து பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் பி.வணங்காமுடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x