Published : 08 Nov 2024 03:26 AM
Last Updated : 08 Nov 2024 03:26 AM

போக்குவரத்து வசதியற்ற மலைகிராம மக்களுக்கு மருத்துவ சேவை: 25 இருசக்கர ஆம்புலன்ஸ்களை ரூ.1.60 கோடியில் வாங்க தமிழக அரசு உத்தரவு

கோப்புப் படம்

சென்னை: அணுக கடினமான, போக்குவரத்து வசதியற்ற மலைகிராமங்களில் வாழும் மக்களுக்காக, ரூ.1.60 கோடி மதிப்பில் 25 இருசக்கர அவசரகால மருத்துவ வாகனங்கள் வாங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டசெய்திக்குறிப்பு: அணுகுவதற்கு கடினமான மற்றும் போக்குவரத்து வசதியற்ற மலை கிராமப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் இதர மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் 25 இருசக்கர அவசர கால மருத்துவ வாகனங்கள் ரூ.1.60 கோடி செலவில் வாங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இவ்வாகனங்கள் 108 அவசரகால ஊர்திகளுக்கு இணைப்பு வாகனங்களாக செயல்பட்டு, நோயாளிகளை மருத்துவமனைக்கு துரிதமாக அழைத்துச் செல்ல வழிவகுக்கும். மாநிலம் முழுவதும் உள்ள எளிதில் அணுக முடியாத மலைக் கிராமங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர்களின் சுகாதார சேவையை மேம்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

சிறப்பம்சங்கள்: நவீன முறையில் உரிய மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்ட இரு சக்கர அவசரகால வாகன சேவையானது, தற்போதுள்ள 1353 அவசரகால 108 ஊர்தி சேவையினுள் அடங்கும். மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பு, மகப்பேறு, பாதுகாப்பான பிரசவ போக்குவரத்து மற்றும் தாய்சேய் நல மருத்துவ பரிசோதனைகளுக்கான சேவைகள் வழங்கப்படும். மருத்துவ மற்றும் எதிர்பாராத அவசரநிலைகளில் உதவுவதற்கு ஏற்றவாறு இவ்வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எளிதில் அணுக முடியாத, 10 மாவட்டங்களில் உள்ள மலைக் கிராமங்களை தேர்ந்தெடுத்து, அங்கு வாழும் பழங்குடியின மக்களுக்கும் மற்றும் இதர மக்களுக்கும் இந்த இருசக்கர முதலுதவி வாகனங்கள் உடனடி சேவை செய்யும். மேலும், இந்த இருசக்கர அவசரகால வாகனத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுகண்காணிக்கப் படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x