Published : 08 Nov 2024 12:52 AM
Last Updated : 08 Nov 2024 12:52 AM
தமிழகம் முழுவதும் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப ஏதுவாக, விதிமுறைகளை வகுக்க நிபுணர் குழுவை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளில் காலியாக உள்ள இணை பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நேரடியாக நியமிக்கக் கோரி வசந்தகுமார் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி பட்டு தேவானந்த் முன்பாக நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் சட்டக்கல்வி இயக்குநர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், ‘‘தமிழகத்தில் உள்ள 15 அரசு சட்டக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட 20 இணை பேராசிரியர் பணியிடங்களில் 19 பணியிடங்கள் காலியாகவுள்ளன. மொத்தம் உள்ள 206 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 70 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதையடுத்து நீதிபதி பட்டு தேவானந்த், ‘‘சட்டக் கல்லூரிகளில் காலியாகவுள்ள இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். அவ்வாறு நிரப்பும்போது இடஒதுக்கீட்டு கொள்கையை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக விதிகளை வகுக்க ஏதுவாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.பாரதிதாசன் தலைமையில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மைதிலி ராஜேந்திரன் ஆகியோர் அடங்கிய நிபுணர் குழுவை நியமிக்கிறேன். அந்தக் குழுவின் ஆலோசனைகளைப் பின்பற்றி பேராசிரியர் நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT