Last Updated : 07 Nov, 2024 04:04 PM

 

Published : 07 Nov 2024 04:04 PM
Last Updated : 07 Nov 2024 04:04 PM

“பாமக - விசிக இருப்பைத் தக்கவைக்க கொடிமர இடிப்பு பிரச்சினையா?” - வேல்முருகன் சந்தேகம்

கடலூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் ஆஜரானார்.

கடலூர்: “விக்கிரவாண்டியில் தவெக மாநாட்டுக்கு கூடிய கூட்டத்தால், அரசியல் கட்சிகள் தங்களது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவே, கட்சிக் கொடிக் கம்பங்களை இடித்து பிரச்சினைகளை கிளப்புவதாக தனக்கு சந்தேகம் எழுகிறது,” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ கூறியுள்ளார்.

நெய்வேலி சம்மட்டிக்குப்பம் பகுதி பாமக மாவட்டச் செயலாளராக இருந்த ஆறுமுகம் என்பவர் கடந்த 2016-ல் தனது ஆதரவாளர்களுடன் சென்றபோது அரிவாளால் வெட்டப்பட்டார். இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உட்பட 19 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்காக கடலூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வேல்முருகன் இன்று (நவ.7) ஆஜராகினார்.

முன்னதாக நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லை பகுதியில் கொடிக் கம்பங்கள் இடித்த பிரச்சினை தமிழக அளவில் இருபெரும் சமூகங்களுக்கு இடையே மோதலை உருவாக்கும் நிலையை உண்டாக்கி இருக்கிறது. இது தொடர்பாக அக்கட்சிகளின் தலைவர்கள் திருமாவளவன் மற்றும் ராமதாஸ் ஆகியோர் இதற்கு காரணமானவர்களை கட்சியிலிருந்து நீக்கி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் டாஸ்மாக்கால் தான் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. பிரச்சினைக்குரிய இடங்களில் கொடிக் கம்பங்கள் நடப்படுவதை மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் தடுக்க வேண்டும். அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து கட்சிக் கொடி கம்பங்களை அகற்றினால் முதல் ஆளாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி கம்பங்களை நானே முன்னின்று அகற்றுவேன்.

அதிமுக, திமுக என நாங்கள் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் அந்தக் கட்சி ஆட்சியில் குறை இருக்கும்போது அதனை நான் சுட்டிக்காட்ட எப்போதும் தவறுவதில்லை. என்னைப் பற்றி தவறாக பேசுபவர்கள் அரசியலில் கத்துக்குட்டித்தனமாக பிதற்றுபவர்கள். விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழக மாநாட்டுக்கு கூடிய கூட்டத்தால், அரசியல் கட்சிகள் தங்களது இருப்பைக் காட்டிக் கொள்ள இதுபோன்ற பிரச்சினைகளை எழுப்புவதாக தனக்கு சந்தேகம் எழுகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x