Published : 07 Nov 2024 03:59 PM
Last Updated : 07 Nov 2024 03:59 PM
சென்னை: அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சி அறிவித்திருந்த பேரணிக்கு காவல் துறையினர் திடீரென அனுமதி மறுத்ததால் அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போலீசாருடன் வாக்குவாதம் செய்ததுடன் கொட்டும் மழையில் சாலையில் படுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதனால், எழும்பூரில் பரபரப்பு ஏற்பட்டது. அனுமதியை மீறி பேரணி நடத்த முயன்றதால் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டால் தேவேந்திர குல வேளாளர் மற்றும் ஆதிதிராவிட மக்களின் உரிமை பறிக்கப்படுவதைக் கண்டித்தும், அந்த இடஒதுக்கீட்டை மீட்டெடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னை எழும்பூர் ராஜ ரத்தினம் ஸ்டேடியம் அருகில் நவம்பர் 7-ம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி விழிப்புணர்வு பேரணி நடைபெறும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்திருந்தார். இதற்காக காவல் துறை அனுமதியும் பெறப்பட்டது.
அதன்படி, இன்று காலை முதலே புதிய தமிழகம் கட்சியினர் எழும்பூர் ராஜ ரத்தினம் ஸ்டேடியம் அருகே திரண்டனர். அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 11.50 மணியளவில் அங்கு வந்தார். அப்போது அங்கிருந்த போலீசார் பேரணிக்கு அனுமதி இல்லை என்றனர். இதையடுத்து டாக்டர் கிருஷ்ணசாமிக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மழையும் பெய்து கொண்டிருந்தது. திடீரென கொட்டும் மழையில் டாக்டர் கிருஷ்ணசாமி சாலையின் நடுவே படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அவரது கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதையடுத்து டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், "எங்கள் கட்சியின் சார்பில் பேரணி நடத்துவதற்கு காவல் துறையினரிடம் கடந்த மாதம் 25-ம் தேதியே அனுமதி பெற்றுவிட்டோம். இந்த நிலையில் இன்று திடீரென பேரணி நடத்த அனுமதியில்லை என்று காவல் துறையினர் தெரிவித்தனர். அதைக் கண்டித்துதான் நாங்கள் சாலையில் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். இந்த இடத்தில்தான் எல்லா கட்சியினரும் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அவ்வாறு இருக்கும்போது எங்களுக்கு மட்டும் அனுமதி மறுப்பது நியாயமல்ல.
அருந்ததியருக்கு 3 சதவீதம் உள் இடஒதுக்கீடு 2009-ம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டது. இதைக் கண்டித்து பெரியளவில் இப்போராட்டம் நடைபெற்றால் அதனால் அவர்கள் செய்த தவறு பொதுமக்களுக்கு தெரிந்துவிடும் என்பதற்காகவே எங்களுக்கு அனுமதி மறுத்துள்ளனர். இது கடும் கண்டனத்துக்கு உரியது" என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
தொடர்ந்து, அனுமதியை மீறி பேரணியில் ஈடுபட முயன்றதால் டாக்டர் கிருஷ்ணசாமி உட்பட நூற்றுக்கணக்கானோரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தியும் - மாஞ்சோலை கிராமத்தை பாதுகாக்க வலியுறுத்தி நடக்கவிருந்த புதிய தமிழகம் கட்சியின் பேரணிக்கு திட்டமிட்டு தடை விதித்த பாசிச ஸ்டாலின் அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.!@DrKrishnasamy @CMOTamilnadu pic.twitter.com/sXZAXswWpp
— Puthiya Tamilagam (@PTpartyOfficial) November 7, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT