Published : 07 Nov 2024 01:17 PM
Last Updated : 07 Nov 2024 01:17 PM

அதிகாரத்தில் பங்கு என்ற விஜய்யின் அறிவிப்பு பிற கட்சிகளை இழிவுபடுத்தக்கூடியது: கே.பாலகிருஷ்ணன்

கே.பாலகிருஷ்ணன் | கோப்புப்படம்

மதுரை: “நீங்கள் கூட்டணிக்கு வந்தால், அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என்று கூறுவது, ஏதோ பதவிக்காக மற்ற கட்சிகள் அனைத்தும் ஓடிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டு அவர்களை இழிவுபடுத்துவது போல அல்லவா இருக்கிறது, அந்த அறிவிப்பு,” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மதுரையில் இன்று (நவ.7) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “நிறைய பேர் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ளனர். நடிகர் விஜய் மட்டும்தான் கட்சித் தொடங்கினார் என்று கூற முடியாது. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை நிறைய பேர் கட்சி ஆரம்பித்தனர். இதைவிட பிரம்மாண்டமான விழாக்கள் எல்லாம் அப்போது நடந்ததை நாம் பார்த்திருக்கிறோம். நடிகர் விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கும்போது, இதைவிட கூட்டம் பலமடங்கு அதிகமாகவே இருந்தது.

எனவே, புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கிவிட்டதால், அவர்கள் என்ன சொல்கிறார்கள், அதற்கு நாங்கள் என்ன பதில் சொல்கிறோம் என்பது குறித்து சொல்ல வேண்டிய தேவை கிடையாது. நாளை அவை நடைமுறைக்கு வரும்போது, அதுகுறித்து எங்களுடைய கருத்தைக் கூறுவோம்.

நிச்சயமாக விஜய்யின் வருகையோ அவருடைய அறிவிப்புகளோ நிச்சயமாக திமுக கூட்டணிக்குள் எந்தவிதமான சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. அதுதொடர்பாக ஏற்பட்ட பல்வேறு விதமான சந்தேகங்களை, சம்பந்தப்பட்டவர்கள் தெளிவுபடுத்திவிட்டனர். இவ்வாறு நான் கூறுவதால், திமுக அரசுடன் கருத்து வேறுபாடுகளே ஏற்படவில்லை என்று நான் கூற விரும்பவில்லை.

எங்களைப் பொருத்தவரையில், மக்களுக்கான கோரிக்கைகளை நாங்கள் கேட்கத்தான் செய்வோம். திமுக அரசுடன் கூட்டணியில் இருப்பதால், சாம்சங் பிரச்சினையை நாங்கள் விட்டுக்கொடுத்துவிட முடியுமா? கூட்டணியில் இருப்பதால், நிலங்களைக் கையகப்படுத்துவதை நாங்கள் ஏற்க முடியுமா? எனவே அந்தப் போராட்டம் என்பது தொடரும். அது திமுகவோ அல்லது வேறு கட்சியோ யார் ஆட்சியில் இருந்தாலும் அதை தொடரத்தான் செய்வோம்.

அதேநேரத்தில் பாஜக என்கிற மதவெறி அரசாங்கம், ஆட்சியை எதிர்த்து நாங்கள் நிச்சயமாக இணைந்துவிடுவோம். எனவே, கருத்து வேறுபாட்டுக்கு இதற்கு முடிச்சுப்போட்டு, கூட்டணி இருப்பதால் விட்டுக்கொடுத்துவிடுவோம் என்று பேச்சுக்கே இடமில்லை.

மேலும், ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று விஜய் அறிவித்திருப்பதற்கான காரணத்தை அவரிடம் தான் கேட்க வேண்டும். அவர் அறிவிப்புக்கு நான் எப்படி பதில் அளிப்பது. அதிகாரத்தில் பங்கு கொடுப்பதாக அறிவித்தால், வேறொரு கூட்டணியில் இருப்பவர்கள் வருவார்கள் என்று நினைப்பதே தவறு. ஒரு கொள்கையை அறிவித்து அந்த கொள்கைக்காக இணையும்படி அழைப்பது வேறு.

எங்களது ஆட்சியில் இந்த கொள்கைகள், திட்டங்களை நிறைவேற்றுவோம் என்று அறிவிப்பது வேறு விஷயம். நீங்கள் கூட்டணிக்கு வந்தால், அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என்று கூறுவது, ஏதோ பதவிக்காக மற்ற கட்சிகள் அனைத்தும் ஓடிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டு அவர்களை இழிவுபடுத்துவது போல அல்லவா இருக்கிறது, அந்த அறிவிப்பு,” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x