Published : 07 Nov 2024 06:04 AM
Last Updated : 07 Nov 2024 06:04 AM
சென்னை: மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள சிறிய மருத்துவமனைகளில் 24 மணி நேர சேவையை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் சாமிநாதன், பொதுச்செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக சென்னையில் அவர்கள் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: எங்களது நீண்டநாள் கோரிக்கையான அரசாணை 354-ஐ மறுஆய்வு செய்து ஊதியம் மற்றும் பணி உயர்வு வழங்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அரசாணை 293-ஐ மாற்றம் செய்து வழங்கியதில் ஆரம்ப சுகாதார நிலைய மற்றும் பல் மருத்துவர்களுக்கு கிடைக்கவேண்டிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் ஆகிய அனைத்து காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு மருத்துவமனைகளில் நாளுக்கு நாள் பெருகி வரும் நோய்வாய்ப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 32,000 மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். குறைந்த அளவில் மருத்துவர்களை வைத்துக்கொண்டு 24 மணி நேர சேவைக்கு அழுத்தம் தரப்படுகிறது. இதனால் மக்களின் உயிருக்கும் மருத்துவர்களின் உடல் நலனுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
எனவே, அனைத்து மருத்துவமனைகளிலும் சுழற்சி முறையில் பணி செய்யும் நடைமுறையை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். குறைந்தது 7 மருத்துவர்கள் இல்லாமல் 24 மணிநேர சேவையை நடத்தக் கூடாது. மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் சிறிய மருத்துவமனைகளில் 24 மணி நேர சேவையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். பேட்டியின்போது மருத்துவர்கள் ரமா, சம்பத், நிஜந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT