Published : 07 Nov 2024 05:07 AM
Last Updated : 07 Nov 2024 05:07 AM
சென்னை: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதை கண்காணித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்த பல்வேறு முன்னெடுப்புகள் பள்ளிக்கல்வித் துறையால் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் நிலை, உட்கட்டமைப்பு வசதிகள், அரசின் திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென அனைத்து அலுவலர்களுக்கும் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தியிருந்தார். அதன்படி மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதவிர முறையாக ஆய்வு செய்யாத அலுவலர்களின் பட்டியலையும் பொதுவெளியில் வெளியிட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், பள்ளி ஆய்வின்போது கற்பித்தல் பணிகளில் சுணக்கம் காட்டிய ஆசிரியர்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில் தர்மபுரி மாவட்டம், அரூர் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட கரிமங்கலம் வட்டாரம், ராமியாம்பட்டி பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி ஆசிரியர் கே.பாலாஜி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவர் பள்ளிக்கே வராமல், மாற்று நபரை வகுப்பு எடுக்க அனுப்பியது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர் பாலாஜி மீது 17-வது விதியின் கீழ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உள்ளதாக துறைசார்ந்த அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் பள்ளிக்கல்வித் துறை வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT