Published : 07 Nov 2024 05:41 AM
Last Updated : 07 Nov 2024 05:41 AM

பயிர் கடன், உரம் வழங்குவது உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, அவர்களின் கோரிக்கைகளை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: விவசாயத்தை பாதுகாக்க, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, அவர்களின் கோரிக்கைகளை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்.

குறிப்பாக, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளின் மூலம், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர் கடன் முறையாக, முழுமையாக வழங்கப்பட வில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதாவது, விவசாயப் பரப்பளவுக்கு ஏற்ப, கடன் பெற்று விவசாயம் செய்ய விவசாயிகள் முற்படுகின்றனர்.

ஆனால், சில வங்கிகளில் பயிர் செய்யும் பரப்பளவுக்கு ஏற்ப கடனை வழங்காமல் குறைத்து வழங்குவதால், விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.

மேலும், விவசாயிகளுக்கு உரங்களை வழங்குவதிலும் தட்டுப்பாடு இருப்பாக தெரிகிறது. இதற்கெல்லாம் காரணம் நிதி பற்றாக்குறை. இதனால், வங்கிகளில் போதிய அளவுக்கு பணம் இருப்பில்லை எனக்கூறுவது விவசாயத்தை பாதுகாக்க வழிவகுக்காது. அதேபோல, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் அனைத்து வகையான உரங்களும் தேவையான அளவு இருப்பில் இருப்பதில்லை என்பதும் முறையல்ல.

விவசாயிகளுக்கு தேவையான விதை நெல் மற்றும் விதைகளை வட்டார வேளாண் மையங்களில் வழங்குவதைப் போல, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களின் மூலம் வழங்க வேண்டும்.தற்போது, வட்டார வேளாண் விரிவாக்க மையங்களுக்கு சென்று தேவையான விதைகளை வாங்குவதற்கு காலநேரம், அலைச்சல், செலவு ஆகிய சிரமம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களின் மூலம், தேவையான விதைகளை அவ்வப்போதே வழங்கினால், அந்தந்த கிராமப் பகுதி விவசாயிகள் சிரமம் இன்றி வாங்குவதற்கு ஏதுவாக இருக்கும்.

எனவே, விவசாயிகளின் கோரிக்கைகளான பயிர்கடன், உரங்கள், விதைகள் ஆகியவற்றை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களின் மூலம் உரிய காலத்தில் வழங்க தமிழக அரசு தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x