Published : 07 Nov 2024 03:20 AM
Last Updated : 07 Nov 2024 03:20 AM

தமிழகம் முழுவதும் பழனிசாமி விரைவில் சுற்றுப்பயணம்

அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்த தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளுக்கும் விரைவில் சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாக, மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிற மாநில செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்டம் தோறும் நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை மற்றும் அதிக அளவில் இளைஞர்களை கட்சிக்குள் சேர்ப்பது, அவர்களுக்கு பொறுப்புகள் வழங்குவது, தற்போது அதிமுக மீதான மக்களின் மனநிலை உள்ளிட்டவை குறித்து மாவட்ட செயலாளர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: சட்டப்பேரவை தேர்தலுக்கு அனைவரும் தயாராக வேண்டும். வாக்குச்சாவடி குழுக்கள் இல்லாத இடங்களில் உடனடியாக அமைக்க வேண்டும். கட்சியை தேர்தலுக்கு தயார்படுத்த வேண்டும். திமுக ஆட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளையும், அதிமுக அரசின் சாதனைகளையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். 2026 தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்க அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

தொண்டர்களையும், நிர்வாகிகளையும் உற்சாகப்படுத்த தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக விரைவில் சுற்றுப்பயணம் தொடங்க இருக்கிறேன். தற்போது அரசியல் சூழல் மாறி வருகிறது. தேர்தல் நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். திமுக, பாஜக தான் நமக்கு பிரதான எதிரிகள். அதிமுக குறித்து திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் விமர்சிக்காத வரை, அவர்களை அதிமுக நிர்வாகிகள் யாரும் விமர்சிக்க வேண்டாம். கடுமையான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இக்கூட்டத்தில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணைப் பொதுச் செயலாளர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, "முதல்வர் ஸ்டாலின், கருணாநிதியின் புகழ் பாடுவதையும் அதுபோல உதயநிதி, ஸ்டாலின் புகழ் பாடுவதையும் அன்றாட நிகழ்வுகளாக வைத்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, மக்கள் நலம் காப்பதில் கவனம் செலுத்துவதில்லை. திமுக அரசின் மக்கள் விரோத போக்கையும், ஜனநாயக விரோத போக்கையும் மக்களிடையே எடுத்துச் சென்று சட்டப்பேரவை தேர்தலை அதிமுக சந்திக்கும். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக படுதோல்வி அடையும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x