Last Updated : 06 Nov, 2024 05:32 PM

4  

Published : 06 Nov 2024 05:32 PM
Last Updated : 06 Nov 2024 05:32 PM

“விஜய்யின் தவெக யாருக்கும் 'பி டீம்’ ஆக இருப்பதாக தெரியவில்லை” - ஜி.கே.வாசன் கருத்து

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்

மயிலாடுதுறை: தமிழக வெற்றிக் கழகம் டெல்லியில் இருக்கக் கூடிய கட்சிக்கோ அல்லது தமிழகத்தில் இருக்கக் கூடிய கட்சிக்கோ ’பி டீமாக’ இருப்பதாகத் தெரியவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

மயிலாடுதுறை அருகேவுள்ள எலந்தங்குடியில் இன்று திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்க வந்த வாசன் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உறுப்பினர் சேர்க்கை முடிந்த பின்னர் டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை, தஞ்சை, கோவை, மதுரை ஆகிய மண்டலங்களுக்கு நான் சென்று நிர்வாகிகளை சந்தித்து உறுப்பினர் அட்டைகளை ஒப்படைக்க உள்ளேன். சம்பா தாளடி சாகுபடி பணிகளை விவசாயிகள் தாமதமாக தொடங்கியுள்ளதால், பயிர்க் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகை செலுத்துவதற்கான இறுதி தேதி நவ.15 என்பதை நவ.30-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்.

பயிர்க் கடன் வாங்க, பயிர்க் காப்பீடு செய்ய, நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய என 3 முறை சிட்டா அடங்கல் வாங்க வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர். இதனை ஒரு முறை மட்டுமே பெற்றால் போதும் என்ற நிலையை விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில் அரசு ஏற்படுத்த வேண்டும்.

கர்நாடக அரசு தமிழகத்துக்கு தரவேண்டிய நிலுவை தண்ணீர் ஏற்கெனவே பாக்கி இருக்கிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ, தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீர் கொடுக்க வேண்டுமோ அதனை உடனடியாக கொடுக்க வேண்டும். தமிழக அரசு கூட்டணி, அரசியல் என்றெல்லாம் பார்க்காமல் தமிழக விவசாயிகளின் எண்ணங்களை பிரதிபலிக்க வேண்டும்.

மயிலாடுதுறை தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை நீண்ட காலமாக மூடிக்கிடப்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லுக்கான ஆதார விலை நியாயமானதாக, விவசாயிகளுக்கு ஏற்புடையதாக இல்லை. பூம்புகார் சுற்றுலா வளாக மேம்பாட்டுப் பணிகள் மிகவும் தொய்வாக நடக்கிறது. இதற்கு காலக்கெடு நிர்ணயித்து விரைவுபடுத்த வேண்டும்.

தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் அச்சுறுத்தப்படும் நிலை நீடிக்கிறது. அச்சமின்றி மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல மத்திய, மாநில அரசுகள் துணை நிற்க வேண்டும். இலங்கை கடற்படையின் அத்துமீறலை தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு இந்திய வெளியுறவுத் துறை கடினமான போக்கை கையாள வேண்டும். கட்டுமானப் பணிகளுக்கு மணல் கிடைக்காத சூழல் உள்ளதற்கு காரணம் குவாரிகளில் நடைபெற்ற ஊழல். இதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

ஊழல் இல்லாவிட்டால் சாதாரண மக்களுக்கும் மணல் கிடைக்கும். மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும். மது மற்றும் போதைப் பொருட்களால் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாகி நிற்கிறது. திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. வாக்களித்த மக்கள் குறித்து கவலைப்படாமல் மக்கள் மீது வரிச்சுமைகளை ஏற்றி வைத்துள்ளது.

தமிழகத்தில் புதிய கட்சிகள் தொடங்கப்பட்டு நடத்தப்படுவது என்பது மக்களுக்கு புதிதல்ல. தவெக தலைவர் தன்னுடைய புதிய கட்சி, அதன் கோட்பாடுகள், வளர்ச்சி என்ற அடிப்படையில் செயல்பட முடியுமே தவிர மற்ற கட்சிகளை சந்தோஷப்படுத்துவதற்காக தன் கட்சியின் கோட்பாடுகளை கொடுக்க முடியாது என்பதுதான் உண்மை நிலை. அக்கட்சியின் வருங்கால செயல்பாடுகள், மக்கள் பணி இவற்றையெல்லாம் வைத்துத்தான் கணிக்க முடியும். காலம்தான் அதற்கு பதில் சொல்ல முடியும். பொறுத்திருந்து பார்ப்பதுதான் விவேகமான அரசியலாக இருக்க முடியும்” என்று அவர் தெரிவித்தார்.

திமுகவின் பி டீம் எனவும், பாஜகவின் பி டீம் எனவும் தவெக மீது வைக்கப்படும் விமர்சனம் குறித்து கேட்டதற்கு, “தமிழக வெற்றிக் கழகம் டெல்லியில் இருக்கக் கூடிய கட்சிக்கும் பி டீமாக தெரியவில்லை, தமிழகத்தில் இருக்கக்கூடிய கட்சிக்கும் பி டீமாக தெரியவில்லை. தன்னுடைய கட்சியை வளர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் செயல்படத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

இருட்டில் பயத்தின் அடைப்படையில் பாடுவது போல குற்றஞ்சாட்டுவது ஏற்கத்தக்கதல்ல. மக்கள் அதுபோன்றவர்களை சரியாக கணிப்பார்கள்” என்றார் வாசன். தமாகா மாநில செயற்கு உறுப்பினர் ஆர்.எஸ்.சுரேஷ் மூப்பனார், மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளர் கே.எம்.ஜி.சிங்காரவேலன், மயிலாடுதுறை மாவட்டத் தலைவர்கள் சங்கர், கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பேட்டியின் போது உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x