Published : 06 Nov 2024 05:26 PM
Last Updated : 06 Nov 2024 05:26 PM

மோசடியாக ‘போன் பே’ மூலம் பணப் பரிவர்த்தனை: தனியார் நிறுவனங்களை முடக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

போன் பே

சென்னை: மோசடியாக போன்-பே செயலியை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்யும் தனியார் நிறுவனங்களை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணப் பரிவர்த்தனை செயலியை தவறாக பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி போன்-பே நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. அதில், தங்கள் நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்த சிலர் பணப் பரிவர்த்தனைகள் செய்து தங்கள் நிறுவனத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துகின்றனர். இதுபோல் பண மோசடி செய்யும் நிறுவனங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அது போன்ற நிறுவனங்களை உடனடியாக கண்டறிந்து தொடர்ந்து மோசடி நடக்காமல் முடக்குவதுடன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி கே. குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “மோசடி செய்யும் நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், ஆரம்பக்கட்டத்தில் மோசடி செய்யும் நிறுவனத்தை கண்டறிந்து முடக்க முடியாது. எந்த நிறுவனம் பண மோசடியில் ஈடுபட்டது என உறுதி செய்யப்பட்டதும் நடவடிக்கை எடுக்கப்படும். எந்த நிறுவனத்தால் பாதிப்பு என போன்-பே நிறுவனம் இ-மெயில் மூலமாகவும் புகார் அளித்தால் அதை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இன்று வழக்கை விசாரித்த நீதிபதி, “மோசடி குறித்து சம்பந்தப்பட்ட பணபரிவர்த்தனைக்கான யூ.ஆர்.எல் கணக்கு ஐடியை மத்திய அரசுக்கு போன்-பே நிறுவனம் வழங்க வேண்டும். அந்த ஐடியில் தொடர்ந்து மற்ற நிறுவனங்கள் பணப் பரிவத்தனை செய்யாத வகையில் அவற்றை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x