Published : 06 Nov 2024 04:29 PM
Last Updated : 06 Nov 2024 04:29 PM

“திமுக கூட்டணி கட்சித் தலைவர்களை விமர்சிக்காதீர்!” - அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுரை

சென்னை: திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் குறித்து அதிமுக நிர்வாகிகள் யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று சென்னையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிற மாநிலச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு பழனிசாமி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பழனிசாமி பங்கேற்று, மாவட்டம்தோறும் நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை மற்றும் அதிக அளவில் இளைஞர்களை கட்சிக்குள் சேர்ப்பது, அவர்களுக்கு பொறுப்புகள் வழங்குவது, தற்போது அதிமுக மீது மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பன உள்ளிட்டவை குறித்து மாவட்டச் செயலாளர்களிடம் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, "ஒவ்வொரு மாவட்டத்திலும் உறுப்பினர் சேர்க்கை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதில் மந்தநிலை தென்பட்டால் மாவட்டச் செயலாளர் மீது நடவடிக்கை பாயும். அதை மனதில் வைத்து மாவட்டச் செயலாளர்கள் செயல்பட வேண்டும். விரைவில் உட்கட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக கட்சி நிர்வாகிகள் தயாராக வேண்டும். அதனைத் தொடர்ந்து பொதுக்குழு நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்.

தற்போது அரசியல் சூழல் மாறி வருகிறது. தேர்தல் நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் குறித்து அதிமுக நிர்வாகிகள் யாரும் விமர்சிக்க வேண்டாம். திமுக ஆட்சியில் நடந்து வரும் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் உள்ளிட்ட மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணிகளை மாவட்ட செயலாளர்கள் தீவிரப்படுத்த வேண்டும்" என்று கூட்டத்தில் பழனிசாமி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இக்கூட்டத்தில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணைப் பொதுச் செயலாளர்கள் நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழக முதல்வர் ஸ்டாலின், கருணாநிதியின் புகழ் பாடுவதையும், உதயநிதி, ஸ்டாலின் புகழ் பாடுவதையும் அன்றாட நிகழ்வுகளாக வைத்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, மக்கள் நலம் காப்பதில் கவனம் செலுத்துவதில்லை.

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில், திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கையும், ஜனநாயக விரோதப் போக்கையும் மக்களிடையே எடுத்துச் சென்று சட்டப்பேரவை தேர்தலை அதிமுக சந்திக்கும். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக படுதோல்வி அடையும். தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணி எப்படி இருக்கும் என்பதை கடந்த காலங்களை பார்த்துப் புரிந்து கொள்ளலாம்” என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x