Last Updated : 06 Nov, 2024 03:25 PM

11  

Published : 06 Nov 2024 03:25 PM
Last Updated : 06 Nov 2024 03:25 PM

“வடக்கு, தெற்கு என பிரிவினைவாதம் பேசாமல் வளர்ச்சிக்கு முதல்வர் துணை நிற்க வேண்டும்” - வானதி சீனிவாசன்

கோவையில் இன்று நடந்த அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலிடன், பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோரிக்கை மனு வழங்கி பேசினார் | படம்: ஜெ.மனோகரன்

கோவை: “வடக்கு, தெற்கு என பிரிவினைவாதம் பேசி மக்களை திசை திருப்பாமல், ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் துணை நிற்க வேண்டும்” என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

கோவையில் இன்று (புதன்கிழமை) தமிழக முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வானதி சீனிவாசன் பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக அரசு சார்பில் பிரம்மாண்டமான முறையில் நூலகம் கோவை தெற்கு தொகுதியில் அமைக்கப்படுகிறது. நூலகம் பல தலைமுறைகளுக்கான திட்டமாகும். அதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். கோவையில் நடைபெற்ற விழாவின் நிறைவில் அவரை நேரில் சந்தித்து கோவை தெற்கு தொகுதி சார்ந்த கோரிக்கை மனுவினை அளித்தேன்.

அவிநாசி சாலையில் நீலம்பூர் வரை மேம்பாலம் நீட்டிக்கப்பட வேண்டும் என்பது நான் ஏற்கெனவே சட்டப்பேரவையில் வைத்த கோரிக்கையாகும். அதேபோல் தங்க நகை தொழில் சார்ந்து நான் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்று நகை தயாரிப்பு பட்டறைக்கு நேரில் சென்று கோரிக்கைகளை கேட்டறிந்துள்ளார் முதல்வர். தங்க நகை பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிப்பும் வெளியிட்டுள்ளார். அதற்கும் நன்றி.

விஸ்வகர்மா யோஜனா என்ற திட்டம் கைவினை கலைஞர்களுக்காக பல மாநிலங்களில் அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்திலும் அதை அமல்படுத்த வேண்டும். சாலைகள், திடக்கழிவு மேலாண்மை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள் சீரான முறையில் பராமரிக்கப்பட வேண்டும். மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தேவையான தகவல்களை தமிழக அரசு விரைவில் மத்திய அரசுக்கு வழங்க வேண்டும்.

விமான நிலைய விரிவாக்கத்துக்கு 95 சதவீத நிலம் ஆர்ஜிதம் செய்து ஒப்படைக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள நிலத்தையும் விரைவில் ஆர்ஜிதம் செய்து மத்திய அரசிடம் வழங்க வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தினேன். நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதல்வர் தெரிவித்தார். சாலை அமைக்கும் பணிக்கு மேலும் ரூ.200 கோடி ஒதுக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த முறையாவது சிறப்பான முறையில் சாலைகள் அமைக்கப்படுவதை முதல்வர் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.

வடக்கு, தெற்கு என பிரிவினைவாதம் பேசி மக்களை திசை திருப்பாமல், ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு முதல்வர் துணை நிற்க வேண்டும். கோவையை கவர்ந்துவிட வேண்டும் என முதல்வர் செயல்படுகிறார். 2026-ல் அதற்கு பதில் கிடைக்கும். கோவைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் கொடுக்க வேண்டும். இவ்வாறு வானதி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x