Last Updated : 06 Nov, 2024 03:19 PM

 

Published : 06 Nov 2024 03:19 PM
Last Updated : 06 Nov 2024 03:19 PM

‘நான் முதல்வன்’ திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமித ட்வீட்

கோப்புப் படம்

சென்னை: “உலக அரங்கில் மிளிரும் இளந்தலைவர்களை நான் முதல்வன் திட்டம் வாயிலாக நாம் வளர்த்தெடுத்து வருகிறோம்” என நான் முதல்வன் திட்டத்தின் செயல்பாடு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவுத்திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பல லட்சம் மாணவர்கள் திறன் பயிற்சி பெற்று வருகின்றனர்.

அந்த வகையில், சமீபத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற மாணவர்கள் பங்கேற்ற நேர்காணல் தொடர்பாக, நேர்காணல் நடத்திய ஹரதன் பால் என்ற யூடியூபர் தனது சமூக வலைதளபக்கத்தில், ‘நான் நேர்காணல் செய்த பி.டெக் இறுதியாண்டு மாணவர்கள் பெரும்பாலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைருவரும் வெவ்வேறு கல்லூரிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஒரே நிறுவனத்தில் ‘ஐபிஎம் கிளவுட்’ தொழில்நுட்ப திறன் பயிற்சி பெற்றிருந்ததை அறிந்தேன். அவர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, தங்கள் மாநில முதல்வர், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் படிக்கும் மாணவர்கள் கிளவுட் குறித்து அறிந்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டதன் அடிப்படையில் பயிற்சி பெற்றதாகவும், அவர்கள் இந்த பயிற்சி மற்றும் கிளவுட் தொடர்பான புராஜெக்ட்டை முடிப்பதும் கட்டாயம் என்றும் தெரிவித்தனர். ஒரு அரசியல்வாதி இது தொடர்பாக யோசித்திருப்பது சிறப்பானதாகும். மாநில அரசின் சிறப்பான முயற்சி இது. இது நாடு முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு நன்றி தெரிவித்து, ஐபிஎம் நிறுவனத்தைச் சேர்ந்த தேவ்காந்த் அகர்வால் தனது பதிவில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும், நாளைய திறன் திட்டம் குறித்தும், அதில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி குறித்தும் விளக்கியுள்ளார்.

இந்நிலையில், இந்த இரு பதிவுகளையும் சுட்டிக்காட்டி ‘நான் முதல்வன்’ திட்டத்தின் வெற்றி குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ‘தமிழகத்தின் முதல்வராகவும் ஒரு பெருமைமிகு பெற்றோராகவும் நமது இளைஞர்களின் அறிவுத்திறன் அங்கீகாரம் பெறுவது கண்டு எனது நெஞ்சம் பெருமித உணர்வால் நிறைகிறது. என் நெஞ்சுக்கு நெருக்கமான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் வாயிலாக உலக அரங்கில் மிளிரும் இளந்தலைவர்களை நாம் வளர்த்தெடுத்து வருகிறோம். நமது இளைஞர்கள் நிமிர்ந்து நின்று, உலகை வெற்றிகொள்ளவும் முன்னடத்திச் செல்லவும் தயார் என்று பறைசாற்றுகிறார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x