Published : 23 Jun 2018 12:35 PM
Last Updated : 23 Jun 2018 12:35 PM
கடலூரில் இணைப்புச் சாலையை உறுதியளித்தபடி புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, பொதுநல அமைப்பினர், பொதுமக்கள் ஆகியோர் சார் ஆட்சியருக்கு அல்வா கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திருப்பாதிரிப்புலியூரிலிருந்து கம்மியம்பேட்டை பாலம் வரை ஜவான் பவான் அமைக்கப்பட்டது. இந்த சாலை அவ்வப்போது பெய்யும் மழையின் போது அடிக்கடி சேதமடைந்து வருவது வாடிக்கையாக உள்ளது.
இதனால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதும் தொடர்ந்து வந்தது. இந்த சாலையை சீரமைக்க அவ்வப்போது நிதி ஒதுக்கீடு செய்து, சாலை சீரமைக்கப்பட்டாலும், அவை தரமற்ற வகையில் சீர் செய்யப்படுவதால் மீண்டும் மீண்டும் சாலை சேதமடைவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதற்கு பல்வேறு பொது நல அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து போராட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தனர்.
இந்த சாலையின் அவலநிலை குறித்து பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழுந்ததால் மீண்டும் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் ரூ.1 கோடி அளவில் சாலை சீரமைக்கப்பட்டது. அந்த சாலையும் நீடிக்க வில்லை. விரைவில் பழுதடைந்தது. மீண்டும் ரூ.3 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட இணைப்பு சாலை உடைந்து நொறுங்கியதால் பொது நல இயக்கங்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.
இதனால் சாலை அமைப்பதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்துவதுடன் விரைவில் சாலையை சீரமைத்து தருமாறு அனைத்து பொது நல இயக்க கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். மேலும் இது தொடர்பாக கடந்த 2017 ஜூன் மாதம் அமைச்சர் எம்.சி சம்பத் மற்றும் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் பல முறை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து அனைத்து பொது நல அமைப்பினரும், மாற்றுத்திறனாளிகளும் கடந்த ஜூன் 26-ம் தேதி சாலை மறியல் செய்ய முயற்சித்த போது, அவர்களை தடுத்த போலீஸார், 59 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், அன்று மாலையே கடலூர் சார் ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ், நெடுஞ்சாலை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மாதத்தில் சாலையை தற்காலிகமாக புதுப்பித்து தருவதாகவும் மூன்று மாதத்தில் பொதுப்பணித் துறையிடமிருந்து அந்த சாலையை நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்றி முழுமையான தார் சாலையாக அமைக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.
இதையடுத்து வழக்குக்குள்ளாக்கப்பட்ட 59 பேரும் கடலூர் மாவட்ட நீதிபதியும் சட்டப் பணிகளின் தலைவருமான தனபாலிடம் தனித்தனியே மனுக்கள் அளித்தனர். அதில் சாலை அமைத்ததில் முறைகேடு, மற்றும் அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும், அவரைச் சார்ந்திருப்பவர்களுக்கும் நேரிடையாக தொடர்பு இருப்பதாகவும் மனு அளித்தனர். புகார் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட நீதிபதி, சென்னையில் உள்ள ஊழல் கண்காணிப்பு இயக்குநருக்கு பரிந்துரைத்தார். ஆனால் ஊழல் கண்காணிப்பு பிரிவினர் விசாரணை நடத்தவில்லை எனத் தெரிகிறது.
இந்த நிலையில் சாலையை 3 மாதத்தில் செப்பனிட்டு தருவதாக உறுதியளித்த சார் ஆட்சியர், தற்போது ஓராண்டாகிய நிலையில் அந்த சாலையை சீரமைக்க ரூ 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஆயினும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அந்த சாலையை நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றும் அந்த கோப்புகள் அப்படியே உள்ளன.
சாலையும் புதியதாக அமைக்கப்படாததால், விரக்தியடைந்த பொது நல அமைப்பினர், கடலூர் மக்களும் ஏமாற்றப்பட்டுவிட்டதாகவும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கடலூர் மக்களுக்கு அல்வா கொடுத்து விட்டதாகவும், இணைப்புச் சாலை விவகாரத்தில் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் மக்களுக்கு அல்வா கொடுத்து வருவதாகவும் அந்த ஏமாற்றத்தின் எதிரொலியாகவே சார் ஆட்சியருக்கு அல்வா கொடுக்கும் போராட்டத்தை நடத்தியதாகவும் பொது மக்களிடையே பிரச்சாரம் செய்து, வெள்ளிக்கிழமை அனைத்து பொது நல இயக்க கூட்டமைப்பினர் கடலூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் அல்வா கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, சார் ஆட்சியர் அலுவலக ஊழியர்களும் அல்வாவை, வாங்க மறுத்ததால், பொதுநல அமைப்பினர் வெளியே வந்து, பொதுமக்களுக்கு அல்வா கொடுத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT