Published : 06 Nov 2024 12:28 AM
Last Updated : 06 Nov 2024 12:28 AM
சென்னை: மோட்டார் வாகன ஆய்வாளர் 110 பேரை தேர்வு செய்வதற்காக 6 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட போட்டித்தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் போக்குவரத்து துறைக்கு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 45 பேரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித்தேர்வு அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 110 பேரை தேர்ந்தெடுப்பதற்காக 2018-ம் ஆண்டு பிப்.14-ம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிக்கையின் அடிப்படையில் விண்ணப்பித்தவர்களுக்கு அதே ஆண்டு ஜூன் 10-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.
ஆனால், 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை அத்தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்படவில்லை. தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்களின் எதிர்காலம் என்னவாகும் என்பது தெரியாமல் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அதற்கு டிஎன்பிஎஸ்சி அமைப்புதான் பொறுப்பேற்க வேண்டும்.
6 ஆண்டுகளுக்கு முன் தேர்வு எழுதியவர்கள் பணியில் அமர்த்தப்படாமல், புதிதாக தேர்வு செய்யப்படுபவர்கள் பணியமர்த்தப்பட்டால் யாருக்கு பணிமூப்பு வழங்குவது என்பதில் குழப்பம் உண்டாகும். எனவே, அதைத் தவிர்க்கும் வகையில், 45 மோட்டார் வாகன ஆய்வாளர்களை நியமிப்பதற்கான தேர்வின் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே 2018-ம் ஆண்டில் நடத்தப்பட்ட 110 பேரை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு முடிவுகளை அறிவித்து அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT