Published : 05 Nov 2024 10:58 PM
Last Updated : 05 Nov 2024 10:58 PM
விழுப்புரம்: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாவட்ட வாரியாக சுற்றுபயணம் மேற்கொண்டு அரசு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வருகிறார். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் நாளை காலை 10 மணியளவில் அரசுத்துறை அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் தலைமையில் ஆய்வுகூட்டம் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை (நவ.05) பிற்பகல் சென்னையிலிருந்து புறப்பட்டு திண்டிவனம் வந்தடைந்த உதயநிதிக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது எம்எல்ஏ மஸ்தான், விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சேகர், தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் செஞ்சி சிவா, இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், செஞ்சி பேரூராட்சித் தலைவர் மொக்தியார் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் துணை முதலமைச்சர் உதயநிதிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் பழனி புத்தகம் கொடுத்து வரவேற்றார். விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கௌதம சிகாமணி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது எம்எல்ஏக்கள் அன்னியூர் சிவா, லட்சுமணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயசந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினரும், ஒன்றிய செயலாளரான பிவிஆர் சு. விஸ்வநாதன், விழுப்புரம் நகர்மன்றத் தலைவர் தமிழ்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து திருவெண்ணைநல்லூரில் உள்ள திருமண மண்டப வளாகத்தில் உட்கார்ந்து எழுதிகொண்டிருக்கும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் வெண்கல சிலையை துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் திறந்துவைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: “அனைத்து தொகுதிகளிலும் கருணாநிதி சிலையை முதல்வர் திறந்து வைத்து வருகிறார். அந்த வகையில் இங்கு நான் கலைஞர் சிலையை திறந்து வைத்துள்ளேன். 21 ஆண்டுகளுக்கு முன் 2001-ல் தளபதி நற்பணி மன்றம் ஏற்பாடு செய்த விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தேன். அப்போதுதான் பொதுவாழ்க்கையில் விளையாட்டு போட்டியை துவக்கிவைத்தேன்.
இன்று விளையாட்டுத்துறை அமைச்சராகி இந்திய அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளை தொடங்கிவைக்கும் வாய்ப்பை பெற்றேன். பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து, புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், காலை உணவுத்திட்டம், மகளிர் உரிமை தொகை திட்டம் என முத்தான 5 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வெற்றியை கொடுத்தீர்கள். அரசு நலத்திட்டங்களை பெற்ற ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பயனாளியை தொடர்புகொண்டு நம் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை துவக்குவோம்.
கலைஞரின் சிந்தனைகளை, எழுத்துகளை மக்களிடம் கொண்டு செல்லவே கலைஞர் சிலைகள் திறக்கப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றிபெற்று தலைவரை முதல்வர் நாற்காலியில் மீண்டும் உட்காரவைப்போம். டெல்லியிலிருந்தும், இங்கிருந்தும் கூட்டணி அமைத்து வந்தாலும் நாம்தான் வெற்றி பெறுவோம். அந்தவகையில் நாம் தேர்தல் பணியாற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT