Published : 05 Nov 2024 08:29 PM
Last Updated : 05 Nov 2024 08:29 PM

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு: நடிகை கஸ்தூரி மீது வழக்குப் பதிவு

சென்னை: தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வன்கொடுமை தடுப்புச் சட்டம் போல் பிராமணர்களைப் பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் கடந்த 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டு, தெலுங்கு மொழி பேசுபவர்கள் குறித்து சொன்ன கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

இந்நிலையில், தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரில், ‘எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் பொதுவெளியில் ஒட்டுமொத்த தெலுங்கு சமுதாயத்தில் உள்ள அனைத்து பெண்களையும் நடிகை கஸ்தூரி இழிவுபடுத்தி உள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில், நடிகை கஸ்தூரி மீது, எழும்பூர் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வருத்தம் தெரிவித்த கஸ்தூரி: இதனிடையே, நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “கடந்த 2 நாட்களாக எனக்கு பல மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. அவை பிரச்சினையை மேலும் தீவிரமாக்கியுள்ளது. இருப்பினும் எனது மரியாதைக்குரிய தெலுங்கு சகோதரர் ஒருவர், தமிழ்நாடு மற்றும் அதை கடந்து வாழும் தெலுங்கு மக்களுக்கு நான் பேசிய வார்த்தைகள் குறித்து பொறுமையாக விளக்கினார்.

வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்த நாட்டின் உண்மையான பெருமை மிகு தேசியவாதி நான். சாதி மற்றும் பிராந்திய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட எனக்கு எப்போதும் தெலுங்கு மக்களுடன் சிறந்த தொடர்பு உண்டு. அது எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். நாயக்கர்கள், கட்டபொம்மன் ஆகியோரின் புகழையும், தியாகராஜர் கீர்த்தனைகளையும் கேட்டு வளர்ந்தவர் நான். என்னுடைய தெலுங்கு சினிமா பயணத்தை மிகவும் மதிக்கிறேன். தெலுங்கு மக்கள் எனக்கு பெயர், புகழ், அன்பை வாரி வழங்கியுள்ளனர்.

நான் வெளிப்படுத்திய கருத்துகள் குறிப்பிட்ட சூழல் சார்ந்து சில நபர்கள் குறித்து பேசியவையே தவிர, பெரும்பான்மையான தெலுங்கு சமூகத்தை குறிவைத்து சொல்லபட்டவை அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். குடும்பம் போன்ற எனது தெலுங்கு சமூகத்தை புண்படுத்துவதோ, காயப்படுத்துவதோ என்னுடைய நோக்கமல்ல. கவனக்குறைவாக அப்படி எதுவும் நடந்திருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவரின் நலன் கருதி நவம்பர் 3-ம் தேதி தெலுங்கு மக்களை குறிப்பிட்டு நான் பேசிய கருத்துகளை திரும்ப பெறுகிறேன். அன்றைய என்னுடைய உரையில் இடம்பெற்ற முக்கியமான கருத்துகளை இந்த சர்ச்சை தேவையில்லாமல் திசை திருப்பியிருக்கிறது. தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு சகோதரர்கள், தமிழ்நாடு பிராமணர்களின் கண்ணியமிகு போரட்டத்துக்கு துணை நிற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x