Last Updated : 05 Nov, 2024 07:53 PM

4  

Published : 05 Nov 2024 07:53 PM
Last Updated : 05 Nov 2024 07:53 PM

“திமுக - காங்கிரஸ் கூட்டணி எஃகு கோட்டை போன்றது” - செல்வப்பெருந்தகை 

சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை பேசினார். 

மேட்டூர்: திமுக - காங்கிரஸ் கூட்டணி இணக்கமாகவும், வலிமையாகவும், எஃகு கோட்டை போன்ற உறுதியடனும் இருக்கிறது. இண்டியா கூட்டணியை யாரும் சிதைக்க முடியாது. இதில் எந்த சந்தேகமும் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை சீரமைத்து, வலிமைப்படுத்துவதற்கான கூட்டம் இன்று (நவ.5) நடந்தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, கட்சியின் தேசிய செயலாளர் சூரஜ் ஹெக்டே, காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ராஜேஸ்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் செல்வப்பெருந்தகை பேசியது: “நாட்டுக்கு சுதந்திரத்தை வாங்கி கொடுத்தது காங்கிரஸ் கட்சி. வேறு கட்சியினரால் இதைக் கூற முடியுமா? காங்கிரஸ் கட்சியால் மட்டுமே கூற முடியும். காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் எல்லோருக்கும் சேர்ந்த சித்தாந்தம். அந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சி கொள்கை கோட்பாடு உள்ளது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒரு கொடி பறக்கிறது என்றால் அது காங்கிரஸ் கட்சியின் கொடி தான்.

கூட்டணி குறித்து பேசும்போது கூட்டணி கட்சியினர் கிராம கமிட்டி உள்ளதா எனக் கேட்கிறார்கள். 100 சதவீதம் கிராமக் கமிட்டி கட்டமைப்பை உருவாக்க இருக்கிறோம். கிராம கமிட்டி மற்றும் பூத் கமிட்டிகளை அமைக்கும் வரை நாங்கள் தூங்கப் போவதில்லை. மற்ற கட்சியினர் எல்லாம் எங்களிடம் கமிட்டி உள்ளது என கூறுகிறார்கள். அதுபோல எங்களிடம் 100 சதவீதம் கமிட்டி இருக்கும். எதைப் பற்றியும் கவலைப்படாமல், மக்களைப் பற்றி மட்டுமே கவலைப்படும் தலைவர் ராகுல் காந்தி தான். மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சி இந்தியாவில் தலைமை ஏற்க வேண்டும். ராகுல் காந்தி தலைமை ஏற்க வேண்டும் என நாம் ஆசைப்பட்டால் மட்டும் போதாது, கடுமையாக உழைக்க வேண்டும்; கட்சியை பலப்படுத்த வேண்டும்” என்று அவர் பேசினார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “தமிழகம் முழுவதும் 100 சதவீதம் கிராமக் கமிட்டிகளை அமைக்க இருக்கிறோம். சோனியா காந்தி பிறந்த தினமான டிசம்பர் 9-ம் தேதி கிராம தரிசனம் என்ற திட்டத்தை தொடங்கி, தலைவர்கள் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று தங்கி பொதுமக்களிடம் குறை கேட்க உள்ளனர். கிராம தரிசனத்தை கன்னியாகுமரியில் முதலில் தொடங்க இருக்கிறோம். தை மாதத்தில் கிராம மற்றும் பூத் கமிட்டி மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

திமுக காங்கிரஸ் கூட்டணி இணக்கமாகவும், வலிமையாகவும், எஃகு கோட்டை போன்ற உறுதியுடனும் இருக்கிறது. இண்டியா கூட்டணியை யாரும் சிதைக்க முடியாது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. காமராஜர் தேசத்தின் சொத்து; அவரை யார் வேண்டுமானலும் கொண்டாடலாம். ஆனால், சொந்தம் கொண்டாட முடியாது. சொந்தம் கொண்டாடக் கூடிய உரிமை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உண்டு. தவறுகளை சுட்டிக் காட்டுவதும், நல்ல திட்டங்களை கொண்டு வருவதை பாராட்டுவதும், வரவேற்பதும் தான் ஜனநாயகம். கருத்துகளை சொல்வதால், இண்டியா கூட்டணியில் பிளவு, சலசலப்பு இருப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

பிரதமர் மோடி நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைத்து வருகிறார். இந்தியாவின் ஆயிரக்கணக்கான சதுர அடி நிலம் சீனா வசம் சென்று விட்டது. இந்தியாவுக்கு பாதுகாப்பு இல்லை. அந்நிய நாடுகளான இலங்கை, பங்களாதேஷ், சீனா, பூடான், நேபாளம் ஆகியவை பகை நாடுகளாக மாறி வருகின்றன. பாஜக ஆகாய தாமரை என மாநாடு நடத்தி, மோடி ஆட்சிக்கு வந்தால் மீனவர்கள் இறக்கமாட்டார்கள் என தெரிவித்தனர். ஆனால், தமிழக மீனவர்கள் இன்னமும் உயிரிழந்து தான் வருகின்றனர். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு குறித்து, சரவணன் வெளியிட்ட அறிக்கை அவரது சொந்தக் கருத்துத்தான்; கட்சியின் கருத்து இல்லை. அமரன் படத்திற்கு தமிழக அரசு வரிவிலக்கு அளிக்க வேண்டும். என முதலமைச்சரிடம் கேட்டுக் கொள்ள இருக்கிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x