Published : 05 Nov 2024 05:10 PM
Last Updated : 05 Nov 2024 05:10 PM

‘பழையன கழிதலும்...’ - ராமதாஸின் எக்ஸ் தள பதிவுக்கு பாமக விளக்கம்

விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் தள பதிவில் நேற்று முன்தினம் ”பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே” என்று பதிவிட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக கடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு டெபாஸிட்டை தக்கவைத்துக் கொண்டது. இதற்கிடையே நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், டிச. 6-ம் தேதி அம்பேத்கர் குறித்த தொகுப்பு வெளியிடப்பட உள்ளது. இத்தொகுப்பில் நீதிபதிசந்துரு, இந்து என்.ராம், விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ்அர்ஜுனா உட்பட 40-க்கும் மேற்பட்டோர் பங்களிப்பு செய்துள்ளனர். சென்னையில் நடைபெறவுள்ள இந்நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க அம்பேத்கரை கொள்கை தலைவர்களாக ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் விசிக தலைவர் திருமாவளவனுக்கும், தவெக தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று முன்தினம் தனது எக்ஸ் தள பதிவில், "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே” என பதிவிட்டுள்ளதை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு தமிழகத்தை பரபரப்புக்குள்ளாக்கின.

இதுகுறித்து பாமக தலைமை நிலைய நிர்வாகிகளிடம் கேட்டபோது, “கடந்த சனிக்கிழமை பாமகவின் சமூக ஊடகப்பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. அப்போது பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற நூற்பாவை முழுமையாக சொல்லும்படி கேட்டார்.

யாருக்கும் முழுமையாக சொல்லத் தெரியவில்லை. பின் அவரே இந்நூற்பாவையை முழுமையாக சொல்லி முடித்து அதன் பொருளையும் விளக்கினார். இதனை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அதை எக்ஸ் தளத்தில் பதிவு செய்தார்.

அவ்வளவு தான். ஆனால் இதை அரசியலாக்கி ஊடகங்கள் தங்களின் கற்பனை குதிரையை ஓடவிட்டுள்ளது. ஒன்றுமில்லாததை ஊதி பெரிதாக்கி சமூகத்தை எப்போது பரபரப்பாகவும், பதற்றமாகவும் வைத்திருக்க ஊடகங்கள் முயல்வது வேதனை அளிக்கிறது” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x