Published : 05 Nov 2024 04:45 PM
Last Updated : 05 Nov 2024 04:45 PM
சென்னை: நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை விரைந்து வழங்க வேண்டும் என போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர், துணை முதல்வர், போக்குவரத்து அமைச்சர் உள்ளிட்டோர் அலுவலகங்களில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்க நிர்வாகிகள் இன்று (நவ.5) அளித்துள்ள மனுவின் விவரம்: “மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சமூக நீதி கொள்கைப்படி, அவரால் உறுவாக்கப்பட்ட போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், பொருளாதார வறுமையில் தவித்து வருகிறோம்.
கடந்த 2015-ம் ஆண்டு நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, முதல்வர் ஓய்வூதியர் பக்கம் நின்றிருந்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியபோதும், அவை அனைத்தும் அதிகாரிகள் மட்டத்திலேயே நின்று தீர்வு பெறாததால் சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்ந்துள்ளோம்.
குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரம் என்றளவில் ஓய்வூதியம் பெறும் எங்களைத் தவிர பிற துறை ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும்போது பரிதவித்து நிற்கிறோம். அகவிலைப்படி உயர்வு வழக்குகளில் ஓய்வூதியர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு பெறப்பட்டதை கவனத்தில் கொண்டு, அகவிலைப்படி உயர்வை விரைந்து வழங்குவதோடு, ஓய்வு பெற்றவர்களுக்கான பணப்பலன் வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT