Published : 05 Nov 2024 01:42 PM
Last Updated : 05 Nov 2024 01:42 PM
மதுரை: தேனி சுருளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்ரவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது.
தேனி மாவட்டம் சுருளிப்பட்டியை சேர்ந்த நாகமணி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘நான் சுருளிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளேன். எனது ஊராட்சியில் மொத்தம் 12 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 6 பேர் பெண்கள், 6 பேர் ஆண்கள். நான் பெண் ஊராட்சி தலைவராக இருப்பதால் சில உறுப்பினர்கள் எனக்கு உரிய மரியாதை தராமலும் என் மீது வேண்டுமென்றே பல்வேறு பொய்யான புகார்களையும் தெரிவித்து வந்தனர். ஊராட்சி மன்ற கூட்டம் நடத்த முடியாத அளவில் பிரச்சினை செய்தனர்.
மாவட்ட ஆட்சியரிடம், 2022-ம் ஆண்டுக்கான ஊராட்சி நிதியில் முறைகேடு செய்ததாக என் மீது பொய் புகார் அளித்தனர். அந்த புகாருக்கு நான் உரிய விளக்கமும் கொடுத்தேன். இருப்பினும், ஊராட்சி வங்கி பண பரிவர்த்தனையில் கையெழுத்திடும் எனது அதிகாரத்தையும் பறித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். ஆட்சியரின் உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது. என் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் முறையான விளக்கம் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், உரிய விசாரணை நடத்தாமல், ஊராட்சி நிதி ரூ.4 லட்சத்தை முறைகேடு செய்ததாகக் கூறி என்னை பதவி நீக்கம் செய்து கடந்த அக்டோபர் மாதம் தேனி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவு சட்ட விதிகளுக்கு முரணானது எனவே ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதுவரை இடக்கால தடை விதிக்க வேண்டும்’ எனக் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், “மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு கொடுக்கப்பட்ட விளக்கங்கள் முறையாக பரிசீலிக்கப்படவில்லை. அதோடு ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதற்கு உரிய காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இவற்றைக் கருத்தில் கொண்டு, தேனி மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மனு குறித்து ஊரக வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலர், மற்றும் இயக்குநர், தேனி மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT