Published : 05 Nov 2024 06:20 AM
Last Updated : 05 Nov 2024 06:20 AM

5 புலிகள் வேட்டையாடப்பட்ட வழக்கின் முக்கிய குற்றவாளியை ம.பி சிறையில் இருந்து தமிழகம் கொண்டுவர நடவடிக்கை: நீதிமன்றத்தில் வனத்துறை தகவல்

சென்னை: 5 புலிகள் வேட்டையாடப்பட்ட வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை மத்திய பிரதேச சிறையில் இருந்து தமிழகம் கொண்டுவர அடுத்த வாரம் வாரண்ட் பெறப்படும் என வனத்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் 5 புலிகள் கடந்தாண்டு வேட்டையாடப்பட்டன. இந்த புலிகள் வேட்டையின் பின்னணியில் இருப்பது யார்? புலியின் தோல், பல், நகங்கள் யாருக்கு விற்கப்பட்டன? இந்த வேட்டையில் சர்வதேச தொடர்பு இருப்பது குறித்து விசாரிக்கப்பட்டதா என வனத்துறைக்கு ஏற்கெனவே உயர் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தது. அதன்பிறகு இந்த வழக்கில் பவாரியா கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்களை வனக்குற்ற தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இதுகுறித்து கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வனத்துறை தரப்பில் புலிகள் வேட்டை வழக்கில் முக்கிய குற்றவாளியான புஜாரிசிங், மத்திய பிரதேச மாநில சிறையில் உள்ளதாகவும், அவரை தமிழகம் கொண்டு வருவதற்கான சிறை மாற்று வாரண்ட் அடுத்த வாரம் உதகை நீதிமன்றத்தில் பெறப்படும் எனவும், இதில் உள்ள சிக்கல்களை களைய மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கும் உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

அதையேற்ற நீதிபதிகள், இந்த வழக்கில் வனத்துறைக்கு தேவையான உதவிகளை செய்ய மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் டிச.2-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x