Published : 05 Nov 2024 02:19 AM
Last Updated : 05 Nov 2024 02:19 AM
சென்னை: ஒவ்வொருவரும் நேர்மையுடன் இருந்தால் நம் தேசம் இன்னும் வலிமை பெறும் என்று இந்தியன் வங்கி மற்றும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து நடத்திய ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் – 2024’ இணைய வழி விழிப்புணர்வு நிகழ்வில் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
‘வளமான தேசத்திற்கு நேர்மை எனும் கலாச்சாரம்’ எனும் நோக்கில் கடந்த அக்டோபர் 28 முதல் நவம்பர் 3-ம் தேதி வரை கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டது. அதனையொட்டி, கடந்த ஞாயிறன்று இந்தியன் வங்கி மற்றும் ‘இந்து தமிழ்திசை’ நாளிதழ் இணைந்து நடத்திய இணையவழி விழிப்புணர்வு நிகழ்வில், சென்னை இந்தியன் வங்கி (எஃப்ஜிஎம்ஓ) துணைப்பொதுமேலாளர் எம்.ஆறுமுகம் பேசியதாவது:
1907-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று தொடங்கப்பட்ட இந்தியன் வங்கியானது, பொதுத்துறை வங்கிகளில் 7-ஆவது பெரிய வங்கி எனும் சிறப்புக்குரியது. நாடெங்கிலும் 5856 கிளைகளையும், 5217 ஏடிஎம்-களையும் நிர்வகித்து வருகிறது. கடந்த அரையாண்டில் 5010 கோடி நிகர லாபம் அடைந்து சாதனை படைத்துள்ள இந்தியன் வங்கி, மக்களுக்குப் பயனளிக்கும் தனது சிறப்பான பணியினைத் தொடர்ந்து ஆற்றிவருகிறது. இந்த கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி, ‘இந்து தமிழ்திசை’ நாளிதழோடு இணைந்து பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி மற்றும் ஆன்லைன் விநாடி வினா போட்டியும், ஆசிரியர்களுக்கான கட்டுரைப் போட்டியும் நடத்தப்பெற்றது. இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வை உண்டாக்குவதன் மூலமாக நேர்மையும் வலிமையும் மிக்க நாடாக நம் நாடு வளம் பெறும் என்றார்.
வருமான வரித்துறை ஆணையர் வி.நந்தகுமார், ஐஆர்எஸ் பேசியதாவது: ஒவ்வொரு தனி மனிதனும் தன்னளவில் நேர்மையோடும் உண்மையோடும் இருந்திட வேண்டும். நாம் கடைப்பிடிக்கும் சின்னச் சின்ன ஒழுக்கம் சார்ந்த செயல்பாடுகள் நம்மையும் வாழ்வில் உயர்த்தும். நம் நாட்டின் வளர்ச்சிக்கும் அது உறுதுணையாக இருக்கும். நாம் பணியாற்றும் அலுவலகத்தில் நேர மேலாண்மையை நாம் சரியாகப் பின்பற்றினால், நம்மைப் பார்த்து சக ஊழியர்களும் பின்பற்றுவார்கள். யாராவது நம்மை கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிற எண்ணமில்லாமல், நம் மனமறிந்து உண்மையாகவும் விதிகளை மீறாமலும் செயல்பட்டால் நமக்கான இலக்கினை நம்மால் விரைந்து அடைய முடியும்.
இந்த கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தின்போது, நாம் ஒவ்வொருவரும் நம் தேசம் வளமாக விளங்கிட நேர்மை என்பதை ஒரு கலாச்சாரமாக கடைப்பிடிப்போம் எனும் உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். நம் பிள்ளைகளுக்கு நேர்மையாக இருப்பதற்கு சொல்லிக் கொடுப்பதோடு, நாமும் அதன் வழி நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதும் இந்த விழிப்புணர்வு வாரத்தின் நோக்கமாகும். ஒவ்வொருவரும் நேர்மையுடன் இருந்தால் நம் தேசம் இன்னும் வலிமை பெறும் என்றார். இந்நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் ஒருங்கிணைத்தார். நிறைவாக, பார்வையாளர்களின் கேள்விகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பதிலளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT