Published : 05 Nov 2024 06:15 AM
Last Updated : 05 Nov 2024 06:15 AM
சென்னை: கட்சியின் மறுசீரமைப்பையொட்டி நடைபெறும் மாற்றங்களுக்கு பொறுப்பாளர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக முகநூல் நேரலையில் அவர் பேசியதாவது: விசிக கட்சியின் கட்டமைப்பை மேலும் மேம்படுத்த, சட்டப்பேரவை தொகுதி வாரியாக மாவட்டச் செயலாளர்களை நியமிப்பது என்று உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், தற்போதுள்ள 144 மாவட்டச் செயலாளர்களை மறுசீரமைப்பு செய்து சிலரை விடுவிக்க உள்ளோம். அதைத் தொடர்ந்து 144 மாவட்டச் செயலாளர்களுடன் மேலும் 90 புதிய செயலாளர்களை தொகுதி வாரியாக நியமிக்க உள்ளோம்.
சட்டப்பேரவை தொகுதி வாரியாக நியமிக்கப்படும் செயலாளர்கள், தொகுதி மாவட்ட செயலாளர்கள் என்றழைக்கப்படுவர். இதற்காக தற்போது மாவட்ட வாரியாக மறுசீரமைப்பு குழுக்களை நியமிக்க உள்ளோம்.
விண்ணப்பம் அளிக்கலாம்: ஒரு மாவட்டத்துக்கு 2 அல்லது 3குழுக்கள் என்று, மேலிட பொறுப்பாளர் மற்ற அந்த பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளை இணைத்து இந்த மறுசீரமைப்பு குழு அமைக்கப்படும்.
இந்த குழு அந்தந்த தொகுதி பகுதிகளுக்கே உங்களைத் தேடி வரும். மாவட்டச் செயலாளர்களுக்கு புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள்கூட சந்தா தொகையுடன் பூர்த்திசெய்த விண்ணப்பத்தை அக்குழுவிடம் ஒப்படைக்கலாம். துணை நிலை அமைப்புகளுக்கான விண்ணப்பங்களும் இக்குழுவிடம் வழங்கலாம். அதன்படி, வரும் 15-ம்தேதிக்குள் அனைத்து நிலை பொறுப்புகளுக்கும் விண்ணப்பித்திருக்க வேண்டும்.
அதேபோல, மது ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் மாநாட்டு தீர்மான விளக்க கூட்டங்களை மாவட்டத்துக்கு ஒரு கூட்டம் நடத்த வேண்டும்.
தீர்மானங்களை துண்டுப் பிரசுரங்களாக அச்சிட்டு மக்களிடம் விநியோகம் செய்ய வேண்டும். மாவட்ட செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் இது தொடர்பாக கூடி முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு கட்சியில் எடுக்கப்படும் முடிவுகளுக்கும், மாற்றங்களுக்கும் நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT